வற் வரி திருத்தம் செய்யப்படும் – பொருளாதாரத்தை மறுசீரமைக்கவும் புதிய சட்டம் -அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!
Wednesday, February 7th, 2024இலங்கை பொருளாதார ரீதியாக ஸ்திரத்தன்மை அடையும் சூழல்நிலை உருவாகும் போது மக்கள் மீதான வரிச்சுமை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றதின் ஐந்தாவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (07) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் கொள்ளை பிரகடன உரையை முன்னுவைத்து சபையில் சமர்ப்பித்து ஜனாதிபதி மேலும் கூறியதாவது,
2022 ஆம் ஆண்டின் இறுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவிகிதம் இருப்புப் பற்றாக்குறை காணப்பட்டது. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், எங்களால் உபரியை ஏற்படுத்த முடிந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு நிலுவைத் தொகை உபரியை ஏற்படுத்திய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். 2023 இல் 28 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 12 சதவீதமாக உள்ளது.
கடனைச் செலுத்த முடியாத நிலையை 2022 ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த சமயம் எமது அந்நியச் செலாவணி கையிருப்பு பூஜ்ஜியம் வரை சரிந்தது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. 2023 டிசம்பர் நிலவரப்படி, நமது அந்நியச் செலாவணி கையிருப்பு 4.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவிகிதமாக சுருங்கியது. 2022 முதல், தொடர்ந்து 6 காலாண்டுகளில் எதிர்மறையாக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 1.6 சதவீத வளர்ச்சியை எட்டினோம்.
இவ்வருடத்தில் 4,127 பில்லயன்களை அரசாங்கம் வருமானமாக ஈட்டியிருந்தாலும் அரசாங்கத்தின் செலவு 6,978 பில்லியன்களாக உள்ளது. அவற்றில் 2,651 பில்லியன்கள் கடனுக்கான வட்டியாக செலுத்துவதற்காகவே செலவிடப்படுகிறது. இதன்மூலம் எங்களின் கடன் சுமையை உணர முடியும்.
நாட்டின் 46 வீதமான பொருளாதாரம் மேல் மாகாணத்திலிருந்தே முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலை மாற வேண்டும். மேல் மாகாணத்திற்கு வெளியே பொருளாதாரம் விரிவுபடுத்தப்பட வேண்டும்.
பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் போன்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகள் வீணாகி வருகின்றன. அது மாத்திரம் அல்ல. இந்த அரச நிறுவனங்களைப் பராமரிக்க பில்லியன் கணக்கான அரச பணம் செலவிடப்படுகிறது. இரு பக்கத்திலும் நாட்டிற்கு இழப்பு. பாரிய வீண்விரயம் இடம்பெறுகிறது.
இந்த நிலங்களிலிருந்து அதிகபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கு பயனுள்ள வேலைத் திட்டத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். இந்த நிலங்கள் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு ஏற்றுமதி வணிக பயிர்ச்செய்கைக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்கப்படும்.
காலநிலை மாற்றம் குறித்து நாம் ஏற்கனவே கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஊழல் தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றினோம். தற்போது சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அத்தகைய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் நாங்கள் ஒருபோதும் அரசியல் அல்லது பிற அழுத்தங்களைப் பிரயோகிக்க மாட்டோம். அது தற்போது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக நவீனமயமாக்கலில் நாம் கவனம் செலுத்தும் சில முக்கிய விடயங்கள் குறித்தும் இந்த கௌரவ சபைக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.
சுற்றுலாத்துறையை எம்மால் எளிதாக அபிவிருத்தி செய்ய முடியும். அந்தத் துறையில் முன்னேற்றத்திற்கு தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்தவும், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வருடம் 2 இரண்டு வீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவோம் என உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன கணித்துள்ளன. 2025இல் 5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே எமது இலக்கு.
வற் வரியின் தாக்கம் பற்றி அறிவோம். பொருளாதார ஸ்திரமடையும் போது வற் வரி திருத்தத்திற்கு உட்படுத்தப்படும்.
வைத்தியர்களுக்கான கொடுப்பனவு 100 வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். அரச ஊழியர்களுக்கு 10ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கியுள்ளோம்.
2024ஆம் ஆண்டு 24 இலட்சம் மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தில் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
மக்களுக்கான வருமான வழிமூலங்களையும், வீட்டு உரிமையையும் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் சாதாரண மக்களும், நடுத்தர மக்களும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தொழில் வாய்ப்புகளையும், வருமான வாய்ப்புகளையும் அவர்கள் இழந்தனர். அவர்களுக்காக தீர்வுகளை வழங்கியுள்ளோம்.
2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் வளர்ச்சியடைந்த பொரளாதாரமாக மாறும் வரவு – செலவுத் திட்டத்தையே 2024ஆம் ஆண்டில் முன்வைத்துள்ளோம்.
காற்றில் ஊசலாடிய பட்டம் போன்று எமது பொருளாதாரம் வீழ்ச்சிக்கண்டது. ஆனால், இன்று ரொக்கட் வேகத்தில் வளர்ச்சிக்கண்டுள்ளது. கிரிஸ் தமது பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப 10 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவைப்பட்டது. இலங்கை குறுகிய காலத்தில் பொருளாதாரத்தில் மீண்டெழுந்துள்ளது.
பணவீக்கம் 50 வீதத்திற்கு அதிகமாகவும் டொலரின் பெறுமதி 380 ரூபாவுக்கும் அதிகமாகவும் இருந்தது. இன்று பணவீக்கம் 4 வீதத்திற்கு குறைந்துள்ளது. டொலரின் பெறுமதி 320 ரூபாவாக குறைந்துள்ளது. இவைதான் நாம் ஏற்படுத்திய மாற்றம்.
உலகில் பல நாடுகள் தமது நாட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளை முறையாக உணர்ந்தே அதற்கான தீர்வுகளை கண்டன. ஏனையவர்களை விமர்சித்து எவரும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை.
பொருளாதாரத்தை முழுமையாக மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் பொருளாதார மாற்றச் சட்டமொன்று கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|