வறட்சியின் தாக்கமும் யாழ் மாவட்டம் முகம்கொடுக்கும் சவால்களும்: ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்ஆ ராய்வு!

வறட்சியை யாழ் குடாநாடு எதிர்கொள்வதற்கான சவால்களை மையப்படுத்தி ‘வறட்சியின் தாக்கமும் எதிர்நோக்கும் சவால்களும்’ என்ற தொனிப்பொருளில் இன்று யாழ் மாவட்டத்திற்கான விசேட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இணைத்தலைமையில் இடம்பெற்றது.
2016ம் ஆண்டு போதிய மழைவீழ்ச்சி இன்மையால் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் ஜனாதிபதியில் வறுமை தணிப்பு ஆண்டு திட்டங்களை முதன்மைப்படுத்தி இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படவிருப்பதாக யாழ் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மழை நீரை போதிய அளவில் சேமிக்காத காரணத்தினால் தான் தற்போது வறட்சி ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தடி நிரை முழுவதுமாக நம்பியுள்ள யாழ் மாவட்டத்தில் காணப்படும் நீர்நிலைகள் சிறுகுளங்கள் தடுப்பணைகளை புனரமைப்பதற்கென விசேட திட்டம் ஒன்று அத்தியாவசியமானது என்று யாழ் மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் சங்கரப்பிள்ளை ரவி சுட்டிக்காட்டினார்.
தற்போதைய வறட்சியினை எதிர்கொள்ளும் விதமாக நீர்விநியோகத்தை வறட்சி ஏற்படும் பிரதேசங்களில் மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. இதற்கென மாவட்டத்தில் காணப்படும் நீர் மூலங்களான பாரிய கிணறுகள் அடையாளப்படுத்தப்பட்டு தயார்படுத்தப்படுவதற்கான முயற்சிகளும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்படவேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பில் இன்றைய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விசேடமாக விவாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Related posts:
|
|