வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றம்!
Wednesday, November 22nd, 20232024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன. அத்துடன், பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இயங்கும் எம்.பிகளும் எதிர்த்தே வாக்களித்தனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் ஹெக்டர் ஹப்புகாமி ஆகியார் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர்.
இதேநேரம் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம் எம்.பியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தார்.
அத்துடன் டளஸ் அழகப்பெரும தலைமையில் அணியினரும் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தனர்.
முன்பதாக 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் கடந்த 13ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மறுநாள் 14 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 7ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், நேற்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.
குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (நவ.22) முதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றையதினம் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
2024 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறை ரூ.2,851 பில்லியன், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 9.1 சதவீதமாக உள்ளது.
மொத்த உத்தேச வருவாய் ரூ. 4,107 பில்லியனாகவும் (வரி வருவாய் ரூ. 3,820 பில்லியன் உட்பட) அடுத்த ஆண்டுக்கான மொத்த செலவினம் ரூ. 6,978 பில்லியன் ரூபாவாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 33 சதவீதம் செலவீனங்கள் அடுத்தாண்டு அதிகரிக்கும் என வரவு -செலவுத் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றதுடன், அதில் அரசாங்கம் வெற்றிக்கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|