வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பம் – ஆலய சுற்றுபகுதியில் இன்றுமுதல் வீதித்தடை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2023/08/DSC_2244.jpg)
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று மிகவும் பக்தி பூர்வாமாக இடம்பெற்றது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.
அதன் படி கல்வியங்காட்டில் அமைந்துள்ள கொடிசீலை வழங்கும் செங்குந்தர் பரம்பரையை சேர்ந்தவரின் இல்லத்தில் கொடிச்சீலைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்று மங்கள வாத்தியம் சகிதம் கல்வியங்காடு வேல் மடம் முருகன் ஆலயத்திற்கு கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.
அதனை தொடந்து வேல் மடம் முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தில் பருத்தித்துறை வீதி ஊடக எடுத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கையளிக்கப்பட்டது.
நல்லூரிலுள்ள செங்குந்த மரபினர் வருடா வருடம் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை காலை பத்து மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம் ஆகும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை முதல் வீதித்தடைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போக்குவரத்து தடை எதிர்வரும் செப்டம்பர் 16ஆம் திகதி வரை நீடிக்குமென யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளைய தினம்(21) ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று (20) காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என யாழ் மாநகர சபை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஆலய சுற்று வீதிகள் மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் வசிப்பவர்கள் வாகனங்களை உட்கொண்டு செல்ல யாழ் மாநகர சபையினால் நிபந்தனையுடனான விசேட அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|