“வரட்சியின் பாதிப்பிலிருந்து மக்களை காக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்.’’ -விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன்.!

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியானது விவசாயிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் உணவு நெருக்கடிக்குள் தள்ளிவிடும் பெரும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினா வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி அரச செயலகத்தில் இன்று (17)இடம்பெற்ற விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் இவ்வருடத்தை வறுமை ஒழிப்பு ஆண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரகடனம் செய்துள்ள நிலையில் இப்பிரகடனத்துக்கு வலுவூட்டுவதற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சார்பில் கலந்து கொண்டு சில கருத்துக்களை தவநாதன் முன்வைத்திருந்தார்
அவற்றின் சாரம்சம் வருமாறு –
1. நடுத்தர மற்றும் சிறிய குளங்களை நிர்மாணித்தலும் புனரமைத்தலும் (பூநகரி குளம், பண்டிவெட்டி குளம், ஆனைவிழுந்தான் குளம், புழுதியாற்றுக்குளம் போன்றவை.)
2. இனக்கலவரங்களால் இடம்பெயர்ந்து வடக்கு நோக்கி வந்த தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட புதிய குடியேற்ற கிராமங்களில் ஏற்று நீர்ப்பாசன திட்டங்களை உருவாக்கலும் செயற்படுத்தலும்.(மலையாளபுரம், கிருஸ்ணபுரம், ஊற்றுப்புலம் போன்ற கிராமங்கள்)
3. அத்து மீறிய, தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக நிறுத்துதல்.
4. வறுமை ஒழிப்புத்திட்டங்களில் கடற்தொழிலாளர்கள் குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தலும் அவர்களின் பிள்ளைகளின் போஷாக்கு மட்டத்தையும் கல்வி மட்டத்தையும் மேம்படுத்துதல்.
5. மேய்ச்சல் தரவைகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
6. திரவப்பால் சார் உணவு உற்பத்திகளுக்கான தொழில் மையங்களை உள்ளுரில் உருவாக்கல்.
7. மாவட்டத்தின் பெருமளவாகவுள்ள இளைஞர் யுவதிகள் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் பெண்தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் வழங்கக்கூடிய பாரிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதோடு அவர்களுக்கான நலன்புரி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
8. சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கல். இம்மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் 30% ஆன குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெறுகிறார்கள். ஏற்கனவே 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இன்னுமொரு தொகுதி குடும்பங்கள் சமுர்த்தி நிவாரணம் பெற தகுதியுள்ளவர்கள் எனத் தெரிவு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை அவர்கள் உள்வாங்கப்படவில்லை.
9. முள்ளம்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் , புற்று நோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு குறைந்தது 5000ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும்.
10. நன்நீர் மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்தல்
11. இன்னும் சில தினங்களில் மழை பெய்யாமல் போகும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய பாரிய பயிரழிவிற்கான நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இந்த நஷ்ட ஈடானது ஏக்கருக்கு 25000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
12. குடிநிர்த்தட்டுப்பாடு ஏற்படக்கூடிய கிராமங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.
13. இந்த நெருக்கடியான நிலமைகளை கவனத்திலெடுத்து உணவு நீர மின்சாரம் போன்றவற்றை வீண்விரையமாக்காது சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு அதிகாரிகளால் கண்காணிக்கப்பட வேண்டும்.
Related posts:
|
|