வட்டக்கச்சியில் பயனாளிகளுக்கு வீடுகளைக் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதன்!

Wednesday, January 6th, 2021

வடக்கச்சிப் பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக வழங்கப்பட்ட இரண்டு வீடுகளை, கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் பயனாளிகளிடம் இன்றையதினம் கையளித்தார்.

வட்டக்கச்சி சிவிக் சென்றர் மற்றும் மாயவனூர் பகுதிகளிலேயே இந்த வீடுகளை அவர் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.

இந்த நிகழ்வுகளில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன், கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன், வீடமைப்பு அதிகாரசபை கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன், அந்தந்தந்தப் பகுதி கிராமசேவையாளர்கள் மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

சிவிக் சென்றர் பகுதியில் நடராஜா திருச்செல்வம் என்பவரும், மாயவனூர் பகுதியில் கோமகன் அகல்வாணி என்ற பயனாளியும் தமது வீடுகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

வீடுகளைக் கையளித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைப்பாளர் வை.தவநாதன் மற்றும் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர், வீடுகளுக்கான மின்சார இணைப்பு மற்றும் பயனாளிகளின் இதர தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன்போது தனது பேரப்பிள்ளைகளுடன் இணைந்து மேசன் கூலி வேலை செய்து தேசிய வீடமைப்பு அதிகாரசபை வழங்கிய வீட்டுத்திட்ட வீட்டுப் பணிக்கான செலவை மீதப்படுத்தியதாக வட்டக்கச்சி சிவிக் சென்றர் பகுதி பயனாளி நடராஜா திருச்செல்வம் தெரிவித்துள்ளார்..

அரசாங்கத்தினால் தேசிய வீடமைப்பு அதிகாரசபை உடாக வழங்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு 6 இலட்சம் ரூபாவே வழங்கப்படுகிறது. ஆனால், வீட்டைக் கட்டுவதற்கு பயனாளிகளுக்கு அதைவிட அதிகமான செலவு ஏற்படுகிறது.  எனினும், தனது பேரப்பிள்ளைகளுடன் இணைந்து குடும்பத்தினர் அனைவரும் மேசன் கூலி வேலை செய்ததன் மூலம் வீடு கட்டுவதற்கான கூலிச் செலவீனத்தை மீதப்படுத்தியதாக திருச்செல்வம் தெரிவித்தார்.

ஆடம்பரமில்லாது அளவாகத் திட்டமிட்டுச் செயலாற்றியதால், செலவைக் கட்டுப்படுத்தி, வீடு கட்டக் கிடைத்த பணத்தில் எதிர்பார்த்ததைவிட பெரிய அளவில் தமது வீட்டைக் கட்டி முடித்துவிட்டதாக அவர் இதன்போது பெருமையுடன் தெரிவித்த அவர் ”இவ்வாறு திட்டமிட்டுச் செயற்பட்டிருக்காவிட்டால் இப்போதும் நாம் அந்தக் கொட்டில் வீட்டிலேயே வாழவேண்டி ஏற்பட்டிருக்கும்” என்று கண்கலங்கியபடி அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் தவநாதன், “சிறுகக் கட்டி, பெருக வாழ்” என்கின்ற எமது முன்னோர்களின் வாக்குக்கமைய இவ்வாறு செயற்பட்ட வீட்டுத் திட்டப் பயனாளி திருச்செல்வத்தைப் பாராட்டியதுடன், ஏனையோருக்கும் இவரது செயற்பாட்டை ஒரு முன்னுதாரணமாகக் காட்டவேண்டும் என்று பிரதேச செயலாளர் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் முகாமையாளர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: