வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையான கண்டனம்!

Monday, December 12th, 2016

வடமாகாணத்தில் எதிர்வரும்- 2017 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த ஆசிரியர்களின் இடமாற்றங்களை ஏப்ரல் வரை தாமதித்து வழங்கும் வடமாகாணக் கல்வியமைச்சின் திட்டமிடப்படாத நடவடிக்கைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வருடாந்த இடமாற்றம் என்பது  ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவருகின்றபோதிலும் அவ்விடமாற்றங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடாமல் வடமாகாணக் கல்வியமைச்சுத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. வெளிமாவட்டங்களிலிருந்து சொந்த வலயங்களுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெறும்போது அவர்களுக்குப் பதிலீடு வழங்குவது முக்கியமான விடயமாகும். ஆனால், வடமாகாணக் கல்வி அதிகாரிகள் பதிலீடு வழங்குவது தொடர்பாக நியாயமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், அவர்களின் உறவுகளைப் பாதுகாப்பதற்குமாக  பதிலீடு வழங்கக்கூடிய நிலை வடமாகாணத்தில் இருந்தும் அதற்குப் பொருத்தமான எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.

இவ்வாறான சூழல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில்  இரு மாதங்களுக்கு முன்னரேயே  2016 இடமாற்றச்சபைக் கூட்டத்திலேயே இலங்கை ஆசிரியர் சங்கம் இதனைச் சுட்டிக்காட்டி  பதிலீடு வழங்கும் முறையினையும் தெரிவித்திருந்தது. அதற்குரிய  எவ்விதமான ஆக்கபூர்வ நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிக் கடந்த 06.11.2016 அன்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரால் கடிதம் வாயிலாக வடமாகாணக் கல்விப் பணிப்பாளருக்குத் தெரிவித்து அதன்பிரதி வடமாகாணக் கல்வியமைச்சுக்கும், முதலமைச்சருக்கும் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில்  ஒரு தொகுதி ஆசிரியர்களுக்குக் கடந்தமாதம் இடமாற்றக்கடிதம் வழங்கப்பட்ட நிலையில்  ஜனவரிமுதல் புதிய பாடசாலையில் பொறுப்பேற்கும் முகமாக  அவர்கள் பணியாற்றிய சேவை நிலையங்களிலிருந்து விடுப்புப் பெற்றுள்ளனர்.  பல ஆசிரியர்கள் வாடகை செலுத்தித் தங்கியிருந்து கற்பித்த இடங்களை விட்டுவிட்டு வந்துள்ளனர்.  ஒரு சிலர் தமது பிள்ளைகளையும் தாம் இடமாற்றம் பெற்ற வலயத்தில் பாடசாலைகளுக்கு சேர்த்துள்ளனர். இத்தகைய நிலையில் இடமாற்றங்களை சித்திரைமாதம் வரை பிற்போடுவதாக வடமாகாணக் கல்வியமைச்சு எடுத்துள்ள தீர்மானம்  வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின்  பிரச்சினைகள் மட்டில் துளியேனும் அக்கறையற்ற செயற்பாடாகவே பார்க்கவேண்டியுள்ளது.

இந்தகைய தீர்மானம்  இலங்கை ஆசிரியர் சங்கத்துடன் எவ்விதமான ஆலோசனையையும் பெற்றுக்கொள்ளமாலேயே எடுக்கப்பட்டுள்ளது. இடமாற்றங்கள் யாவும் நியாயமாகப் பக்கச்சார்பில்லாமல் நடைபெறவேண்டும். பதிலீடு வழங்கும் முறையை நாம் தெரிவித்திருந்தும் கூட இலங்கை ஆசிரியர் சங்கத்திடம் கருத்துப் பெறாமல் வடமாகாணக் கல்வியமைச்சுத் தன்னிச்சையாகத் தீர்மானித்துள்ளமையானது குறித்த ஒரு தொகுதியினரைப் பாதுகாக்கும் நோக்கில்  வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களை மட்டும் தொடர்ந்தும் துன்பப்படுத்தும் நடவடிக்கையாகும்.

வருடாந்த இடமாற்றங்கள் தொடர்பாக  வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் செயற்திறனற்ற தன்மைக்கு வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பலிக்கடாவாக்க இலங்கை ஆசிரியர் சங்கம் அனுமதிக்கப்போவதில்லை. இது தொடர்பாகப் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ceylonteachersunion

Related posts: