வடக்கில் தொண்டர் ஆசிரியர்கள் 676 பேருக்கு நியமன வாய்ப்பு -கல்வி அமைச்சின் செயலர்!

Thursday, July 6th, 2017

வடக்கில்  தொண்டராசிரியர்களாகக் கடமையாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 1,079 பேர் பங்கு கொண்டனர். அவர்களில் 676 பேருக்கு மட்டுமே நியமனங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை,

வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் 2011 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 2011 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதி உள்ளடங்கலாகத் தொடர்ச்சியாக 3 வருடங்களுக்குக் குறையாது பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வகையிலேயே இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

நேர்முகத் தேர்வுகள் கடந்த மாதம் 28,29 மற்றம் 30ஆம் திகதிகளில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலகத்தில் இடம்பெற்றது. இதற்கான நேர்முகத் தேர்வாளர்கள் கொழும்பு கல்வி அமைச்சில் இருந்து வந்திருந்தனர். குறித்த நேர்முகத் தேர்வுக்குப் பாடசாலை அதிபர்கள், வலய அதிகாரிகள் ஆகியோரால் உறுதிப்படுத்தப்பட்ட 1,041 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு அழைக்கப்படவர்களில் 974 பேர் நேர்முகத் தேர்வுக்குச் சமூகமளித்திருந்தனர். இது தவிர பல்வேற காரணங்களாலும் தவறவிடப்பட்டதாக அல்லது புறக்கணிக்கப்பட்டதாக மேன்முறையீடு செய்தவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 105 பேரும் நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.

அதன் பிரகாரம் 1,079 பேர் நேர்முகத் தேர்வுக்கு தோற்றியுள்ளனர். அதிலும் பலர் தகுதி அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். பலர் 2011 ஆம் ஆண்டிலேயே உயர்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாகவும், மேலும் சிலர் இரண்டாவது தடவையாகவும் தோற்றியுள்ளனர். அவ்வாறு முறைகேடாக உறுதிப்படுத்தி கடிதங்களைப் பெற்றவர்கள் முதல் முதல் இணைந்த ஆண்டிலேயே 35 வயதைக் கடந்தவர்களாகவுள்ளனர். போதிய கல்வித் தகுதியை கொண்டிராதவர்கள் எனப் பலர் நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் தற்போதைய அனுமதிக்கமைய 676 பேருக்கு மட்டுமே நியமனங்கள் கிடைப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என்று சில தகவல்கள் தெரிவித்துள்ளன என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: