வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது – ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன்!

Tuesday, July 9th, 2024

தனியார் வைத்திய நிலையங்களை ஊக்கவிக்கும் நோக்கில் அரச வைத்தியசாலைகள் திட்டமிட்டு முடக்கப்படுவது தொடர்பாக வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (09.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சில தினங்களாக சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்த விவகாரம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கருத்து என்ன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் –

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் வைத்தியசாலையை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது.

அதேசமயம் வைத்தியத்துறையின் மாகாண நிர்வாகம் அவர் பொறுப்பேற்று 20 நாள்களுக்குள் பல குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்தது.

ஆனால் நடைமுறை ரீதியாக தென்மராட்சி மக்கள் மாகாண நிர்வாகம் வைத்த குற்றச்சாட்டுக்களை வேடிக்கையானது என விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவர்மீது நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தாம் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தாம் அச்சுறுத்தியதாகவும் கூறுப்படுகின்றது. இவ்வாறான சூழலில் பதில் வைத்திய அத்தியட்சகர் திரு.இராமநாதன் அர்ச்சுனா கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை எமது கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என்று திடமாக தெரிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: