வடக்கு மாகாணசபை தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!
Friday, December 9th, 2016நாட்டில் மத அடிப்படைவாத குழப்பங்களை கடுமையான சட்டங்களை அமுல்படுத்தி கட்டுப்படுத்த முடியும். எனினும் இது உணர்வுபூர்வமான விடயம் என்பதால் பேச்சுவார்த்தை மூலம் இனங்களுக்கிடையிலான அவநம்பிக்கையை நீக்குவதற்கு எதிர்பார்ப்பதாக நீதி மற்றும் பௌத்தவிவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மத மற்றும் இன ரீதியான அடிப்படைவாத செயற்பாடுகளாலேயே சிலர் ஒட்சிசன் பெற்று வருகின்றனர். இவ்வாறான நிலையில் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படக்கூடாது என வடமாகாண சபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானமானது அரசியலமைப்புக்கு முரணானது.
இதுபோன்ற செயற்பாடுகள் மாகாண சபையை குறைத்து மதிப்பிட வழிவகுக்கும் என்றும் கூறினார்.புத்தசாசன அமைச்சு, தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சுக்கள் மீதான வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் இல்லை. எனவேதான் மதவிவகார அமைச்சர்கள் ‘கொமிட்டியாக’ ஜனாதிபதி தலைமையில் சந்தித்து, சகல மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம். மத ரீதியான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை தயாரித்து வருகின்றோம் என்றார் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் சில அரசியல் சக்திகள் செயற்பட்டு வருகின்றன. உத்தேச அரசியலமைப்பு தயாரிப்பில் பௌத்த மதத்துக்குக் காணப்படும் முன்னுரிமை இல்லாமல் செய்யப்படப்போகிறது என்ற கருத்தொன்று மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பில் மக்கள் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பௌத்தத்துக்கான முன்னுரிமையை நீக்கத் தேவையில்லையெனக் கூறியுள்ளார்.
அதுபோல கிறிஸ்தவ மதத்தவர்களின் தலைவரான கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையை இல்லாமல் செய்யத் தேவையில்லையெனத் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் பௌத்த மதத்துக்கு காணப்படும் சிறப்புத் தன்மையை இல்லாமல் செய்ய வேண்டிய தேவை யாருக்கு உள்ளது.
வடக்கு மற்றும் தெற்கில் செயற்படும் அடிப்படைவாத சக்திகளே மக்கள் மத்தியில் வீணான குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லையென மாகாண சபையில் பிரேரணையொன்றை நிறைவேற்றியுள்ளார். என்ன சட்டத்தின் கீழ் அவருக்கு அவ்வாறானதொரு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக் கேட்க விரும்புகின்றோம்.
அரசியலமைப்பின் கீழா அல்லது வேறு ஏதாவது சட்டத்தின் கீழா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். சட்டத்துக்கு முரணான பிரேரணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது. இவை குப்பைக் கூடைகளுக்குள்ளேயே போடப்படும். இவ்வாறு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லாத பிரேரணைகளை நிறைவேற்றும் மாகாணசபை என வடமாகாண சபையின் கௌரவம் குறைவதைத் தவிர வேறெதுவும் இதனால் இடம்பெறப்போவதில்லை.சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற மாகாண சபைகளில் இவ்வாறு அடிப்படைவாதம் கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
நாட்டில் உள்ள மதஸ்தலத்துக்குச் செல்லும் உரிமை குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்தவருக்குத்தான் உண்டு எனக் கூற முடியாது. உதாரணமாக வெள்ளவத்தையிலுள்ள இந்துக் கோவிலொன்றுக்குச் செல்லும் உரிமை இந்துக்களுக்கு மாத்திரம்தான் இருப்பதாக எவரும் சொல்ல முடியாது. இந்தக் கோவில்களுக்கு பௌத்த மக்களே அதிகமாகச் செல்கின்றன. நல்லூர் கோவில், கோணேஸ்வரம், கேதீஸ்வரம் என சகல இந்துக் கோவில்களுக்கும் பௌத்த மக்கள் செல்கின்றனர். அது மாத்திமன்றி பௌத்த பன்சலைகளில் பிள்ளையார், சிவன், முருகன், விஷ்ணு என இந்துக் கடவுள்கள் வழிபடப்படுகின்றன.
“இந்துக் கோவில்களுக்கும், பௌத்த பன்சலைகளுக்கும் சென்று ஒரே கடவுள்களை வணங்கி, பூஜைகளை நடத்திவிட்டு வெளியேவந்து இந்துக்கள், பௌத்தர்கள் என சண்டையிடுவது தொடர்பில் கடவுள்களே சிரிக்கும். இலங்கையில் உள்ளவர்கள் மடையர்கள் எனக் கூட கடவுள்கள் சிந்திக்கும்” என்றார். அப்படியாயின் நாம் யாருக்காக அடித்துக் கொள்கின்றோம். இந்து பக்தர்கள் பலர் பௌத்த பன்சலைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர்.
மன்னார் பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் இந்து பக்தர் ஒருவருக்கு சொந்தமான காணியை பலவந்தமாகப் பிடித்து அதில் விகாரையொன்றை அமைத்திருந்தார். இது தொடர்பில் கூட்டமைப்பின் எம்பி ஒருவர் எனது கவனத்துக்குக் கொண்டுவந்தார். இது குறித்து குறித்த காணி உரிமையாளருடன் பேச்சுநடத்தியதில், தனது காணியை பௌத்த விகாரைக்கு வழங்க இணங்கினார். அதற்குப் பதிலாக மாற்றுக் காணியை வழங்குமாறு மாவட்ட செயலாளருக்கு நாம் பணித்துள்ளோம்.
மத ரீதியான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும். எனவேதான் மதவிவகார அமைச்சர்கள் ‘கொமிட்டியாக’ ஜனாதிபதி தலைமையில் சந்தித்து, சகல மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
மத ரீதியான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான பொறிமுறையொன்றை தயாரித்து வருகின்றோம்.
மட்டக்களப்பு விடயம் தொடர்பில் எமக்கும் தெரியும் என்பதுடன் கவலையடைகிறோம். இவற்றுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்து தடைசெய்ய முடியாமல் இல்லை. எனினும், இது உணர்வுபூர்வமான விடயம் என்பதால் கடும் நடவடிக்கைகளை எடுப்பதைவிட பேச்சுவார்த்தை மூலம் தீர்வைக் காணவே விரும்புகின்றோம்
Related posts:
|
|