வடக்கு மாகாணக் கல்வியமைச்சு மிக முறைகேடான வழிமுறைகளில் நியமனங்களை வழங்கி வருகின்றது – இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு முதல்வருக்கு கடிதம்!

தங்களின் அதிகாரத்தின் கீழுள்ள வடக்கு மாகாண கல்வியமைச்சானது மிகவும் முறைகேடான வழிமுறைகளில் பக்கச் சார்பாக நியமனங்களை வழங்கி வருகின்றது. இவை தொடர்பாகக் கல்வியமைச்சுக்கு எம்மால் தவறெனச் சுட்டிக் காட்டப்பட்ட நிலையிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமல் தன்னிச்சையான சில முடிவுகளின் மூலம் தகுதியானவர்களைப் பாதிப்புக்குட்படுத்தி வருவதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகின்றேன் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலினால் வடமாகாண முதலமைச்சர் க. வி .விக்கினேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
வடமாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் முறையற்ற நியமனங்கள் தொடர்பில் சுட்டிக் காட்டி எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
கடந்த வருடமும் வடமராட்சி கல்வி வலயத்துக்குட்பட்ட வடமராட்சி இந்துமகளிர் கல்லூரி, வடமராட்சி மத்திய கல்லூரி அதிபர் நியமனத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளது. மேற்குறித்த இப்பாடசாலைகளுக்கு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி கல்வியமைச்சால் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.இதில் அதிபர் தரம் – 1 ஐச் சேர்ந்தவர்கள் நேர்முகத்தேர்வுக்குத் தோற்றித் தகுதியான நிலையிலிருந்தும் மேற்படி பாடசாலைகளுக்கு அதிபர் தரம் – 2 ஐச் சேர்ந்தவர்களையே கல்வியமைச்சு நியமித்துள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் முறையிட்டதற்கிணங்க விசாரணை நடைபெற்ற போது பாதிக்கப்பட்டவருக்கு ஒருமாத காலத்தினுள் நிவாரணம் வழங்குவதாகக் கல்வியமைச்சால் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு உறுதியளிக்கப்பட்டது.
ஆயினும் , இன்றுவரை அவர்களுக்கு எந்தவிதமான நியாயமும் கிடைக்கவில்லை. இதேபோன்று வடமாகாணக் கல்வியமைச்சின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பாக அதிகமான முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு உள்ளமையையும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றேன். இவ்வாறான நிலையிலும் வடமாகாண கல்வியமைச்சு அடிப்படை உரிமைகளை மீறும் செயற்பாடுகளிலேயே தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது.
அத்துடன் ஊழல் வாதிகளையும் அரவணைத்துக் காக்கும் அபாயகரமான சூழல் கல்வியமைச்சில் காணப்படுகின்றது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வவுனியா மாவட்டப் பாடசாலையொன்றின் அதிபரின் (திரு.தனபாலசிங்கம்) ஊழல் செயற்பாடுகள் தொடர்பாக விசாரணைக்குழுவினாலும், கணக்காய்வுக் குழுவினாலும் நிரூபிக்கப்பட்டு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையிலும் கடந்த மாதமளவில் அவரைப் பிரபல பாடசாலையொன்றுக்கு அதிபராக வடமாகாணக் கல்வியமைச்சு நியமித்தது. அதற்கு எம்மால் தெரிவிக்கப்பட்ட கடும் ஆட்சேபனைக்கமைய பின்னர் அது நிறுத்தப்பட்டது.
இதேபோன்று சில அதிபர்களின் குற்றங்கள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நிலையிலும் அதற்கு, வடமாகாணக் கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்காமல் நியாயத்தை எதிர்பார்த்த ஆசிரியர்களுக்கு இடமாற்றங்களை வழங்கி முறைகேடுகளுக்குத் துணைபுரிந்து வந்திருக்கிறது. (எடுத்துக்காட்டு – வலி/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி), சில அதிபர்களின் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு விசாரணையையே மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளது.
இவ்வாறு ஊழல்வாதிகளுக்குக் கைகொடுக்கும் இடமாக இன்று வடமாகாணக் கல்வியமைச்சு மாறிவருவது வடமாகாணக் கல்வித்துறையில் எதிர்காலத்தில் அபாயகரமான சூழலை ஏற்படுத்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன்.
தற்போது முல்லைத்தீவு வலயத்தில் புதுக்குடியிருப்புக் கோட்டக்கல்வி அதிகாரி தெரிவிலும் முறைகேடு ஏற்பட்டுள்ளது. அதிபர் தரம் – 1 ஐச் சேர்ந்த அதிபர்கள் இருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்த நிலையில் அதிபர் தரம் – 2 ஐச் சேர்ந்தவருக்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டவருக்கு அதிபர் தரம் -1 இற்குரிய நியமனக் கடிதம் இல்லாத நிலையில் அதிகாரிகள் தாம் விரும்பியரை நியமிப்பதற்காக தாம் விரும்பியவாறு முடிவெடுத்து செயற்படுவது முறையற்ற செயற்பாடாகும்.
இத்தகைய முறைகேடுகளை மறைப்பதற்குத் தெரிவு செய்யப்பட்டவருக்கு அதிபர் தரம் -1 முன்பே கிடைத்திருக்க வேண்டும் . அக்கடிதம் அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிடுவது தவறானதாகும். எவ்விதமான நியமனத்துக்கும் கேட்கப்படும் தகுதிக்குரிய அப்போதுள்ள சான்றிதழே நியமனத்தைத் தீர்மானிக்கும் என்பது பொதுவிதியாகும்.
இந்நிலையில் தரம் -1 இற்குரிய கடிதம் இதுவரை கிடைக்கப்பெறாத ஒருவரைத் தகுதி எனக் கூறுவதும், அதிபர் தரத் தடைதாண்டல் பரீட்சைகளிலும் முறையாகச் சித்தியடைந்த, தகுதியானவர்களை நிராகரிப்பதும் தவறான நடைமுறையாகும். இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட அதிபர்களும் தங்களுக்கு முறையிட்ட நிலையிலும், வடமாகாணக் கல்வியமைச்சால் இந்த நியமனம் முறையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ,. வடமாகாணக் கல்வியமைச்சால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய முறையற்ற நியமனங்கள் தொடர்பாகவும், முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டு முறையான விதத்தில் மீண்டும் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|