வடக்கு மக்களின் உற்பத்திப்பொருட்கள் இடைத்தரகரின் சுரண்டலின்றி விற்பனை

Sunday, November 26th, 2017

விவசாயிகள் இடைத்தரகர்களினால் சுரண்டப்படாமல் தமது உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்வதற்கு வடக்கு மக்களுக்கு யாழ்ப்பாணம் நவீன பொருளாதார மத்திய நிலையத்தினால் சந்தர்ப்பம் கிடைப்பதாக கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 25 ஆயிரம் மகளிர் விவசாய அமைப்புக்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் நேற்று முன்தினம் பாராளுமன்ற வரவு – செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில், நாம் கடுமையான வரட்சியை எதிர் நோக்கினோம். இதனால் 50 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வரட்சி இடம்பெறாதிருந்தால் அரிசியில் நாம் தன்னிறைவடைந்திருப்போம். ஜனாதிபதி விவசாய பொருளாதாரத்தை வலுவூட்டுவதற்கும் இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கும் 3 வருட உணவுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். இதன் மூலம் 10 ஆயிரம் கிலோகிராம் குரக்கன் விதையை பெற்றுக்கொள்வதாகும். 75 சதவீதமான குரக்கன் உற்பத்தி செய்யப்படுகின்றது. சித்தமு காந்தா என்ற மகளிர் விவசாய அமைப்பு அமைக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். நாடு முழுவதிலும் 25 ஆயிரம் விவசாய அமைப்பு அமைக்கப்படவுள்ளது.

நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட மனை உற்பத்தித் திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றது. இதே போன்று 15 ஆயிரம் பழ உற்பத்தி, கிராம வேலைத்திட்டமும் வெற்றிகரமாக இடம்பெறுகின்றது.

2017 ஆம் ஆண்டில் தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களின் களஞ்சிய வசதிக்கான 250 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பிற்கான இழப்பீடு ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் ரூபாவாக வரவு – செலவுத்திட்டத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு காப்புறுதி நிவாரணத்திட்ட முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் அரசாங்கத்தினால் பங்களிப்புச் செய்யப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: