வடக்கு பாடசாலைகள் விரும்பின் நேரத்தில் மாற்றம் ஏற்படுத்தலாம்!

Friday, July 27th, 2018

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் தற்போது நடைமுறையிலுள்ள காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேர நடைமுறையில் நேரத்தை மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் அனுமதியுடன் அதிபர் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி என அந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

பாடசாலைகளில் தற்போது தினவரவுக்காக அடையாள நடைமுறையால் கடந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதும் பாடசாலை நிறைவடைந்து செல்லும்போதும் கைவிரல் அடையாளம் வரவை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இதனை விடவும் வடக்கு மாகாணத்தில் தற்போது பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் பலரும் எமது கவனத்துக்கு கொண்டுவந்தனர். அவற்றில் உள்ள நியாயபூர்வமான விடயங்கள் கண்டறியப்பட்டு மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் காலை 7.30 க்கு ஆரம்பமாவதால் பல இடங்களில் ஆசிரியர்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். மாதத்தில் மூன்று நாள்களுக்கு 7.30 மணியைத் தாண்டி ஒரு நிமிடம் தொடக்கம் 10 நிமிடங்கள் தாமதமாகவரும் ஆசிரியர்களுக்கு அரை நாள் லீவு போடப்படுகின்றது. இதேநேரம் மாலை நேர வகுப்புகள், ஆசிரியர் கலந்துரையாடல்கள் என்பவற்றால் பாடசாலைகள் 1.30 மணிக்கு நிறைவுற்றும் 2 மணியைத் தாண்டியும் ஆசிரியர்களை வீடு செல்ல அனுமதிக்காத நிலையும் காணப்படுகின்றன.

எனவே இவற்றின் அடிப்படையில் தற்போது 7.30 க்கு ஆரம்பமாகி 1.30 க்கு நிறைவு செய்யும் பாடசாலைகள் விரும்பினால் 8 மணிக்கு ஆரம்பித்து 2 மணிக்கு நிறைவுறுத்துவதற்கு சந்தரப்பம் வழங்கப்படும்.

ஆசிரியர்களை மறித்து வேலை வாங்கும் சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் மனித உரிமை அமைப்புகளையோ அல்லது நீதித்துறையினையோ நாடினால் அதற்கு அதிபர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: