வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர் – போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவில்லை என விவசாய அமைச்சர் புகழ்மாலை!
Thursday, November 4th, 2021வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதால், எவரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை விவசாயிகளே இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கியுள்ளதாக பேராதெனிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்போகத்தில் எட்டு இலட்சம் ஏக்கர் நெற்செய்கை காணியில் 5 இலட்சம் ஏக்கர் காணியின் விவசாய நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் விவசாயிகள் விவசாயத்தில் முழுமையாக ஈடுபடுவார்கள். நெற்செய்கைக்கு தேவையான சேதன பசளை உரம் விவசாயிகளுக்கு தேவையான அளவு வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட பயிர்ச்செய்கைகளுக்கான கிருமிநாசினிகள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விவசாயிகள் சேதன பசளை உரத்தை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இப்பிரதேச விவசாயிகள் தமக்கான உரத்தை சுயமாக உற்பத்தி செய்து கொண்டுள்ளார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எவ்வித போராட்டமும் கிடையாது. தெற்கில் உள்ள விவசாயிகள் இரசாயன உரத்தை கோரி வீதிக்கிறங்கி போராடுகிறார்கள்.
உண்மையான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை. அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் சேதன உர திட்டத்திற்கு எதிராக போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
பொலனறுவை மாவட்டத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் எத்தனை பேர் உண்மையான விவசாயிகள் என்பதை ஆராய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் ஆதரவு வழங்கி, சாப்பிடுவதற்கு உணவையும் வழங்கியுள்ளார்கள். விவசாயிகள் அரசியல்வாதிகளின் குறுகிய நோக்கங்களுக்கு அகப்படாமல் சேதன உர திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|