வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சு தனி அமைச்சு ஆக்கப்பட வேண்டும் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சு தனி அமைச்சு ஆக்கப்பட வேண்டும். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் உள்ள மாகாணங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் கல்வியில் தொடர்ந்தும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இதற்கு கல்வி அமைச்சோடு இதரதுறை அமைச்சுக்களும் இணைந்து இருப்பது மூல காரணங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் மத்திய கல்வி அமைச்சு தனி ஒரு அமைச்சின் கீழும், உயர்கல்வி அமைச்சு தனியொரு அமைச்சின் கீழும் நிர்வகிக்கப்படுகின்றன. ஆனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சோடு கலாசாரம், பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரம் என்று பல துறைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் கல்வித்துறைசார் பணிகளுக்கு தனியான முக்கியத்துவம் கொடுக்கமுடியாதுள்ளது. கல்வி என்பது குழந்தைகளின் எதிர்காலம் என்பதற்கு அப்பால் மனித இனத்தின் விழுமியங்களோடு இணைந்த வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.
அதிலும் 40 ஆண்டுகளுக்கு மேலாக சீர்குலைந்துள்ள வடகிழக்கு மாகாணங்களின் கல்வியில் வீழ்ச்சி என்பது இனிமேலும் வரக்கூடாது. உலகமயமாக்கலில் இருந்து எமது குழந்தைகள் விலகிச் செல்வது மட்டுமன்றி உயர்வான கல்விப் பாரம்பரியத்தை மறந்து உதவாக்கரைகளாக மாறிவருவதாக பலரும் குறைகூறிவருகின்றனர். ஆகையால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி அமைச்சானது தனியொரு அமைச்சின்கீழ் கொண்டுவரப்பட்டு, மாணவர்களின் கல்வியில் அதீத கவனம் செலுத்தி, கல்வியால் உயர்ந்த நாடுகளின் கல்விக் கொள்கைகள் பின்பற்றப்பட்டு எமது மாகாணம் முன்னிலைபெறவேண்டும்.
இதனை இரண்டு மாகாணங்களின் முதலமைச்சர்களும் சிந்தித்து தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தாழ்மையான வேண்டுகோளை விடுக்கின்றது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|