வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை – கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங்கம்!

Thursday, September 27th, 2018

 

பாட ஆசிரியர்களைப் பயன்படுத்தி ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக மாணவர்களின் தரவுகளை வடமாகாண கல்வித் திணைக்களத்தின் இணைத் தளத்தில் தரவேற்றம் செய்யுமாறு நிர்ப்பந்தித்து வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இத்தகையை கல்வி அதிகாரிகளின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

பின்தங்கிய பாடசாலைகள் பலவற்றுக்கு இணையத்தள வசதிகளை வடமாகாண கல்வித் திணைக்களம் இன்றுவரை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இந்நிலையில் வலயக் கல்வி அதிகாரிகள் மூலமாகவும் அதிபர்கள் மூலமாகவும் ஆசிரியர்களுக்கு மேலதிகமான ஆவணப் பதிவுச் சுமைகளை ஏற்படுத்த முனைகின்றனர்.

இணையத்தள வசதிகளற்ற பாடசாலைகளிலுள்ள மாணவர்களது விபரங்களையும் தமது இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு வடமாகாண கல்வித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக அறிகின்றோம். அந்தப் பாடசாலை ஆசிரியர்கள் வெளியிடங்களுக்குச் சென்று தரவேற்றம் செய்வதிலுள்ள பிரச்சினைகளையும் நிதி மூலங்களைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவில்லை.

வேளிமாவட்டங்களுக்குரிய போதிய ஆசிரியர் ஆளணி வளத்தை வடமாகாண கல்வித் திணைக்களம் வழங்குவதில்லை. இந்த நிலையில் வெளிமாவட்டங்களில் பின்தங்கிய பாடசாலைகளில் சேவையாற்றிவரும் ஆசிரியர்களுக்கு மேலதிகமான சுமைகளையும் சுமத்தி வருகின்றனர். தமது திணைக்கள ரீதியாக பெறவேண்டிய தரவுகளுக்கும் இணையத்தள வசதிகளற்ற பாடசாலைகளின் நிலைமையைச் சிந்திக்காமல் ஆசிரியர்களைத் தரவேற்றம் செய்யுமாறு வற்புறுத்துவது மிகுந்த கண்டனத்துக்குரிய விடயமாகும்.

யாழ் மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பற்றிய விபரங்களை வடமாகாண கல்வித்  திணைக்களம் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பல தடவைகள் விண்ணப்பங்களை அனுப்பி விபரங்களை சேகரித்திருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆசிரியர் ஆளணி சீராக்கம் என்ற பெயரில் யாழ் கல்வி வலய ஆசிரியர்கள் வடமாகாண கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட நேர்முகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஓய்வு பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் ஓய்வு விடுமுறையைப் பெற்றிருந்த பல ஆசிரியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு நேர்முகம் நடைபெற்றுள்ளது.

வடமாகாணத்தில் இணையத்தள தரவேற்றம் செய்யும் செயற்பாடுகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிதி மூலங்கள் அதிகாரிகளுக்கு கிடைப்பதாக அறியமுடிகின்றது. இத்தகைய நிதி மூலங்கள் தரவுகள் பெறுவதற்கு ஏற்படும் செலவுகளை ஈடு செய்வதற்கு வழங்கப்படுவதாகவும் அறிகின்றோம். ஆனால் பாடசாலைகளில் கற்பித்தல் பணிக்கு மேலதிகமாக ஆசிரியர்களுக்குச் சுமையை ஏற்படுத்தி அதன் மூலம் மீதப்படுத்தப்படும் பணம் எங்கே செல்கின்றது? என்பதையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Related posts: