வடக்கில் 340 மருத்துவர்களுக்கு பற்றாக்குறை!

Tuesday, September 25th, 2018

வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள 120 மருத்துவமனைகளில் 340 மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை உள்ளதாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணத்தின் 120 மருத்துவமனைகளையும் முழுமையாக இயக்க வேண்டுமானால் ஆயிரத்து 153 மருத்துவர்கள் தேவை என்று ஆளணி அங்கீகாரம் உள்ளது. ஆனால் வடக்கு மாகாணம் முழுவதும் 813 மருத்துவர்களே பணியில் உள்ளனர். 340 மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

வடக்கு மாகாணத்தில் ஒரேயொரு போதனா மருத்துவமனை உள்ளது. இது மத்திய அரசின் கீழ் உள்ளது. ஏனைய அனைத்தும் மாகாண அரசின் கீழ் உள்ளன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கு 851 மருத்துவர்கள் தேவையாகவுள்ளனர். தற்போது 582 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் பிரகாரம் வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் 269 மருத்துவர்கள் பற்றாக்குறையாகவே உள்ளனர்.

மத்திய அரசின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு 302 மருத்துவர்கள் தேவையாகவுள்ளனர். தற்போது 231 மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். இவற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் 71 மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: