வடக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்!

Tuesday, July 11th, 2023

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர்.

வடக்கு மாகாணத்திலுள்ள சட்டத்தரணிகள் இன்று எந்த வழக்கு நடவடிக்கைகளிலும் பங்குகொள்ளவில்லை.

குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறிச் சட்டவிரோதமாக விகாரைக் கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதற்கு அமைவாக அண்மையில் அந்தப் பகுதிக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நீதிபதியின் கள ஆய்வு நடவடிக்கையில் குறுக்கிட முயன்றபோது, அங்கிருந்து நீதிபதியின் உத்தரவுக்கு அமைய அகற்றப்பட்டார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை கடுமையாகச் சாடும் வகையில் நாடாளுமன்றத்தில் சரத் வீரசேகர கருத்து வெளியிட்டிருந்தார். தங்களை அங்கிருந்து வெளியேற்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை என்றும், இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

நீதிமன்றத்தையும், நீதிபதியையும் அவமதிக்கும் வகையில் தொடர்ச்சியாகக் கருத்துக்களை வெளியிட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு மேற்கொள்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று வழக்கு நடவடிக்கைகளில் சட்டத்தரணிகள் பங்குகொள்ளவில்லை.

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்து வரும் சரத் வீரசேகர மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: