வடக்கில் கொரோனா பரவாதிருக்க பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கோரிக்கை!
Monday, July 13th, 2020வடமாகாணத்தில் கொரோனா பரம்பல் தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு இந்நோய் பரவாது இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளபோதும், கொரோனா தொற்றுடைய ஒருவர் வடமாகாணத்துக்கு வருகை தந்தால் அவரிலிருந்து தொற்று ஏனையவர்களிற்கும் பரவுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கயைில் –
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தை சார்ந்த 2 பேரை கடந்த ஜூலை மாதம் 4ம் திகதி சந்திப்பதற்காக 3 குடும்பங்களைச் சார்ந்த உறவினர்கள் கந்தக்காடு முகாமிற்கு சென்றிருந்தனர்.
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பலருக்கு கோரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் இந்த 3 குடும்பங்களையும் சேர்ந்த 9 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இவர்களில் 9 மாத குழந்தை ஒன்றிற்கு காய்ச்சல் ,இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்பட்டதனால் அஅந்தக் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்தக் குழந்தைக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தக்காடு சிகிச்சை நிலையத்தில் பணிபுரியும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவருக்கு கோரோனோ தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவரது வீட்டுச் சுற்றாடலில் 4 வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக நெடுந்தீவில் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி தரையிறங்கிய அகதி ஒருவர் தற்போது கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவர் வருகை தந்ததிலிருந்து 2ம் ,9ம் நாள்களில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக காங்கேசன்துறையில்; கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி வருகைதந்த 4 பேர் கட்டாய தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இவர்களில் ஒருவருக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனையவர்களுக்கும் இன்று பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ்ப்பாணம் மாவட்டம் கோப்பாயைச் சேர்ந்த ஒருவர் அண்மையில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வந்திருந்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் சில கைதிகளுக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதனால் அவர் மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கே தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|