வடக்கில் இம்முறை தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் – அமைச்சர் அப்துல் கலீம்!

Thursday, October 26th, 2017

வடக்கை மையமாக கொண்டு தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் நடைபெற இருப்பதாக தபால்துறை அஞ்சல் அலுவல்கள் மற்றும் முஸ்லிம் கலாச்சார அமைச்சர் அப்துல் கலீம் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்டத்தில் இடம்பெறவுள்ள 2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா தொடர்பாக ஆராயும் விசேட முதற்கட்ட கலந்துரையாடல் ஒன்று முஸ்லிம் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற நிலையில் இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைதீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை இணைத்து இந்த தேசிய மீலாத் விழா இவ்வருடம் மார்கழி மாதம் 18ஆம் திகதி யாழ். ஒஸ்மானியா கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இதில் யாழ். மற்றும் கிளிநொச்சி முஸ்லிம் பிரதிநிதிகள் வட மாகாண பள்ளிவாசல் நிர்வாகிகள் சங்கத்தினர், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts: