வடக்கில் ஆசிரிய இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Wednesday, March 7th, 2018

வடக்கு மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் வலயத்துக்குள்ளான இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி தவணையில் இடைப் பகுதியில் இடமாற்றங்;களை நடைமுறைப்படுத்த வேண்டாம் எனவும் கடந்த உள்ளூராட்சித் தேர்தலால் இடைநிறுத்தி வைக்கப்பட்ட மேற்படி இடமாற்றத்தை பாடசாலையின் இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் திகதியான 23.04.2018 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வலயத்துக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ள ஆசிரியர்களின் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், தற்போதைய பாடசாலை, இடமாற்றம் வழங்கப்படவுள்ள பாடசாலை, பாடம் மற்றும் தற்போதைய பாடசாலையில் கடமைக்கு அறிக்கை செய்த திகதி அடங்கிய பட்டியலை மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்குமாறும் முறையான அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே இடமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சேவையின் தேவை கருதி தவணையின் இடைப்பகுதியில் அவசியமாக இடமாற்றம் செய்யவேண்டியிருப்பின் அதற்கான காரணத்தினைத் தெளிவுபடுத்தி தனது அனுமதியைப் பெற்ற பின்னரே இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: