வடக்கிலுள்ள பாடசாலை மாணவர் தலைமயிர் வெட்ட, சீவ விதிமுறைகள் – ஆசிரியர்களையும் பின்பற்றக் கோரிக்கை!
Wednesday, July 18th, 2018பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வதென்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலைமுடி வெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகமளிப்பது தடுக்கப்பட வேண்டும். அதற்கென மாணவர்கள் எப்படி தலைமுடியை வெட்ட வேண்டும், சீவ வேண்டும் என்று வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் மாணவர்களின் தலைமுடிகளைச் சீர்செய்யும்போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவதாகவும் இது தொடர்பாக வடக்கு மாகாணத்தில் உள்ள தமது சங்க உறுப்பினர்களுக்கு அறிவித்துச் செயற்படுத்துவதாகவும் சங்கத்தினர் உறுதி அளித்தனர். சில பெற்றோர்களே தமது பிள்ளைகளைத் தவறாக வழி நடத்தும் வகையில் இவ்வாறான தலைமுடி வெட்டுக்களை ஊக்குவிக்கின்றனர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அறிவுறுத்தலின்படி:
- மாணவர்களின் தலைமுடிகட்டையாக வெட்டப்படும் பின்புறம் ப வடிவத்தில் முறையாக வெட்டப்பட்டும் இருத்தல் வேண்டும்.
- சேட் கொலரிலிருந்து தலைமயிர் ஒரு அங்குலத்திலும் (2.5 செ.மீ) கூடிய இடைவெளியில் இருத்தல் வேண்டும்.
- பக்கத்தோற்றம் ப வடிவத்தில் சீராக்கப்பட்டு காதுக்கு மேல் இருக்க வேண்டும். அதன் கீழ் நீண்டிருக்கக் கூடாது.
- தலைமுடியின் நீளம் அரை அங்குலத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
- தலையில் வரிகள், வடிவங்கள் ஏற்படுத்துதல் முற்றாகத்தடை செய்யப்படுகின்றது.
- பூசகர்கள் மற்றும் மத அனுஸ்டானங்களை நடத்துபவர்கள் அவர்களுக்குரிய சம்பிரதாய சிகை அலங்காரம் மேற்கொள்ள முடியும்.
என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேவேளை பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் தலைமுடியை இடது பக்கம் உச்சிபிரித்து ஒழுங்காக அழகாக சீவியிருப்பதுடன் எண்ணெய் தவிர்ந்த ஏனைய திரவங்கள் பூசுவதும் சென்ற் போன்ற செயற்கை வாசனைத் திரவியங்கள் பூசுவதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரும் இவற்றைத் தவிர்த்து முன்மாதிரியாக இருந்து மாணவர்களின் தலைமுடி வெட்டும் மற்றும் சீருடைகளில் கூட்டுப் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|