வடக்கிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களை இரவு வேளையில்  காலம் தாழ்த்தாது மூடுக!

Sunday, October 1st, 2017

வடமாகாணத்திலுள்ள அழகக நிலையங்கள் (சிகை அலங்கரிப்பு நிலையங்கள்) இரவு 9 மணியுடன் தமது சேவைகளை நிறுத்துமாறு வடமாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.

அவ்வாறு குறித்த நேரத்தின் பின்னர் சேவையில் ஈடுபடும் நிலையங்கள் தொடர்பாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு தாம் ஒத்துழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் தற்போது இடம்பெறும் கஞ்சா கடத்தல், வன்முறை போன்ற சம்பவங்களுக்கு ஏதுவாக அழகக நிலையங்கள் இரவு 9 மணிக்குப் பின்னர் திறந்திருப்பதும் ஒரு காரணமாக உள்ளது. அதாவது இரவு நேரங்களில் அங்கு பலர் தங்கி இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன எனவும் அதன் விபரங்களை தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

அழகக நிலைய உரிமையாளர்கள் தமிழ் கலாசாரத்தை மதிப்பவர்கள். அவர்களை இவ்வாறு குறிப்பதை எமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனினும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் சிலர் காலம் தாழ்த்தி தமது நிலையங்களை மூடுவதாக முறைப்பாடு எமக்குக் கிடைத்துள்ளது. எனவே எமது சங்க உறுப்பினர்களுடன் இது தொடர்பாக கலந்துரையாடி முடிவெடுத்துள்ளோம். அதாவது இனிவரும் காலங்களில் 9 மணிக்குப் பின்னர் அழகக நிலையங்களில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதற்கு சம்மேளனம் எந்தப் பொறுப்பும் ஏற்கமாட்டாது.

எனவே இதற்கு எமது தொழிலாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்குவதுடன், நேரக்கட்டுப்பாட்டை மீறி தொழிற்படும் சங்கங்களுக்கு  பொலிஸார் நடவடிக்கை எடுப்பதற்கு எமது சங்கம் ஒத்துழைக்கும் என தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: