வடக்கிற்கு 11 ஆயிரத்து எண்பது தடுப்பூசிகள் கிடைத்தன – தடுப்பூசித் திட்டம் நாளைமுதல் ஆரம்பம் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Friday, January 29th, 2021

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்குவதற்காக 11 ஆயிரத்து 80 கொவிட்-19 தடுப்பூசி மருந்துகள் கிடைத்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் மேலும் தெரிவிக்கையில் – “வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவ சேவையாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு ஐயாயிரத்து 820 மருந்துகளும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு ஆயிரத்து 160 மருந்துகளும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஆயிரத்து 300 மருந்துகளும் வவுனியா மாவட்டத்துக்கு ஆயிரத்து 700 மருந்துகளும் மன்னார் மாவட்டத்துக்கு ஆயிரத்து 800 தடுப்பூசி மருந்துகளும் கோரப்பட்ட நிலையில் அவை முழுமையாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கும் தடுப்பூசி கோரப்பட்ட நிலையில், அவை தனியான திட்டத்தின் ஊடாக வழங்கப்படுமென சுகாதார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்பதாக இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி,  கொவிஷீல்ட் என்ற பெயரில் ஐந்து இலட்சம் மருந்துகள் இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன.

அந்தத் தடுப்பூசி முதற்கட்டமாக சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் முப்படையினருக்கு ஏற்றும் பணி இன்று மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: