வடக்கின் விவசாயத்துறை மேம்பாடடைய விவசாயிகளுக்கு அனைத்தவகையான மானியங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, August 25th, 2016

வடக்கு மாகாணம் விவசாயத்துறையில் மேம்படவேண்டுமானால் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகள் பெற்றுக்கொள்ளும் அனைத்துவகையான சலுகைகள் மற்றும் மானியங்களை எமது மாகாண விவசாயிகளுக்கும் பெற்றுக்கொடுத்து பொருளாதார நெருக்கடிகளால் எமது பகுதி விவசாயிகளிடையே ஆர்வங்குன்றிவரும் விவசாயதுறையை வளர்ப்பதற்கான புத்துணர்வுகளை உருவாக்கிக்கொடுக்கவேண்டும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளருமான வைத்தியநாதன் தவநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 60ஆவது அமர்வில் நிலப்பயன்பாடு தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் சர்வேஸ்வரன் நியதிச் சட்டமொன்று உருவாக்கப்படவேண்டுமென்ற பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தின் பொருளாதாரம் விவசாயத்திலும் மீன்பிடித்தொழிலுமே தங்கியுள்ளது. ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் விவசாய நிலங்கள் இராணுவ ஆக்கிரமிப்பிலும் வீடுகள் அமைப்பதிலுமே உள்ளதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக உரையாற்றுகையிலே தவநாதன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  மேலும் அவர் உரையாற்றுகையில் –

வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் விவசாயத்துக்கான உற்பத்தி செலவு குறைந்தும் மானியங்கள் அதிகரித்தும்  காணப்படுகின்றது. அதேவேளை வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செலவு அதிகரித்தும் மானியம் குறைந்தும் உள்ளது. கடும் பொருளாதார சுமையால் வாடும் விவசாயிகளுக்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை பெற்றுக்கொடுக்காமல் நில ஆக்கிரமிப்பு இதர காரணங்க என கூறி விவாதங்களை நடத்துவதனால் எந்தவிதமான பயன்களும் எமக்கு கிடைக்கப்போவதில்லை.

மேலும் இராணுவத்தினர் வசமிருக்கும் விவசாய காணிகளை மீட்பதுடன் தற்போது இருக்கின்ற விவசாய காணிகளில் எமது விவசாயிகளை  விவசாய செய்கையில் ஈடுபடுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அதுமட்டுமன்றி புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள் பலரது காணிகள் வடபகுதியில் பற்றைகளாகவும் பாழடைந்த இடங்களாகவும் இருக்கின்றன. இவை சமூக சீரழிவுகளை ஏற்படுத்தும் மையமாகவும் நோய்களை உருவாக்கும் தன்மை கொண்டனவாகவும் உள்ளன. இவற்றை இங்கு வாழும் மக்களுக்கு பெற்றுக்கொடப்பதனூடாகவோ அன்றி அவற்றை சீரமைத்து வளமிக்கதாக்குவதனூடாகவும் நிலப்பயன்பாட்டை உறுதிப்படுத்த முடியும்  எனவும் தவநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: