வடக்கின் மூன்று பெரும் வீதிகளின் திருத்தத்திற்கு நிதி கிடைத்ததும் கேள்விகள் கோரப்படும் சாலை அபிவிருத்தி அதிகார சபை!

Monday, November 20th, 2017

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரமைக்கப்படவுள்ள மூன்று பெரும் சாலைகளுக்கான நிதி கிடைக்கும் கால அளவுக்கேற்ப கேள்வி கோரல் விரைவில் நடைபெறும் என்று சாலை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

இது பற்றி மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:

யாழ்ப்பாண மாவட்டத்தில் சாலை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாலைகளின் சீரமைப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அடுத்த ஆண்டின் மிகப் பெரிய வேலைத்திட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று பெரிய சாலைகளைச் சீரமைப்பதற்கான நிதியை வழங்க தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்துக்கான அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஊடான காரைநகர் சாலை. யாழ்ப்பாணம் பொன்னாலை ஊடான பருத்தித்துறை சாலை. வழுக்கையாறு புங்குடுதீவு ஊடான குறிகாட்டுவான் சாலை என்பன சீரமைக்கப்படவுள்ளன. இதற்காக 15 ஆயிரம் மில்லியன் ரூபா வரை தேவைப்படும். இது மிகப் பெரிய தொகையாகும். நிதி கிடைக்கும் பட்சத்தில் வேலைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.

சீரமைக்கப்படவுள்ள சாலைகள் மூன்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்துச் சாலைகள் ஆகும். அன்றாடப் போக்குவரத்து மற்றும் கால நிலையால் சாலைகள் மாற்றத்துக்கு உள்ளாகும். ஆகவே ஒவ்வொரு வருடமும் சாலைகளின் அதிகமாகும். இந்தச் சாலைகளைச் சீரமைப்பதற்கு அதிக நிதி தேவை. சாலையின் சேதத்துக்கு ஏற்ப அதன் சீரமைப்புக்கும் அதிக நிதி தேவை என்பதால் நிதி ஒதுக்கீடு கால தாமதமின்றி கிடைக்கும் பட்சத்தில் வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், மானிப்பாய், காரைநகர் சாலை சீரமைப்புக்காக 3 ஆயிரத்து 437.5 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாணம் பொன்னாலை பருத்தித்துறை 5 ஆயிரம் 200 மில்லியன் ரூபாவும், வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் சாலைகளை சீரமைப்பதற்கு 6 ஆயிரம் 830 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: