வடக்கின் கல்வி நிலை அதழ பாதாளத்திற்கு செல்ல ஆளுமையற்ற மாகாணசபையின் செயற்பாடுகளே காரணம் – ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Saturday, July 21st, 2018

வடக்கில் கல்வி நிலை படு மோசமாக செல்வதற்கு மாகாணசபையின் ஆளுமையற்ற செயற்பாடுகளே காரணமாக உள்ளது. தமது ஆற்றலற்ற செயற்பாடுகளை சீர்திருத்தாது மற்றவர்கள் மீது பழியைச் சுமத்தி தப்பித்துக் கொள்ள நினைப்பது வெட்கப்பட வேண்டிய விடயம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையானது இன்று அதழ பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கல்வித் தரத்தை உயர்த்துவதாகக் கூறி பாடசாலையின் நேரத்தை காலை 7.30 மணிக்கு மாற்றியதால் கல்வித் தரம் ஒரு போதும் உயரப் போவதில்லை.

ஆரம்ப பிரிவு மாணவர்கள் இந்த நிலைப்பாட்டால் அதிகாலை வேளையிலேயே எழும்பி அரைகுறை உணவுகளை உண்டு பாடசாலைக்கு செல்வதனால் அவர்களுக்கு பாடத்தில் அக்கறை செலுத்துவது குறைவாகவே இருக்கும் அத்துடன் முறையாக உணவு உட்கொள்ளாமையால் நோய்வாய்ப்படும் அவல நிலையும் எற்படுகின்றது.

இதைவிட இன்று மாணவர்களின் பெற்றோர் இருவரும் தொழில் ரீதியான செயற்பாடுகளில் இருக்கின்றனர். இவ்வாறு காலை 7.30 மணிக்கு பாடசாலை ஆரம்பிப்பதனால் பெற்றோரும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படும் வகையிலான இந்த நடைமுறையால் எப்படி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த முடியும்.

மாறாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்காது அத்துறை சார்ந்த நவீன வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்காது  தமது சுயநலங்களை மையமாகக் கொண்டு செயற்படுவதனால் வடக்கின் கல்வி நிலை எப்படி உயர்வடையும்.

நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்த காலப்பகுதியில் அதுவும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் கூட எமது மாகாணத்தின் கல்வித் தரம் வீழ்ச்சிகாணவில்லை. அவ்வாறு செல்லும் வகையிலும் நாம் சந்தர்ப்பங்களை கொடுக்கவும் இல்லை.

எனவே ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களது கைகளுக்கு அதிகாரங்கள் வரும்போது தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளும் வென்றெடுக்கப்படும். அதுவரை இவ்வாறான போலித்தனமான அரசியல் செயற்பாடுகளே நடைபெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: