வடக்கின் அபிவிருத்திக்கு ரூ. 1,658 மில்லியன் ஒதுக்கீடு – சிவஞானசோதி!

Wednesday, February 20th, 2019

கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் வட மாகாணத்துக்கு இதுவரை ஆயிரத்து 658 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம், மறுவாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விவசாயக் குளங்கள் மறுசீரமைப்பு, வீதிகள், பாலங்கள், வடிகால் வசதிகள், நீர் வழங்கல், சமூக பொருளாதார உட்கட்மைப்பு வசதிகளை வலுப்படுத்துவதன் மூலம் கல்வித் துறைமேம்பாடு, பாடசாலைக் கழிவறைகள், குடிநீர் வசதி, வாராந்த சந்தை, கிராம நகர இணைப்பு, ஆன்மீக செயற்பாட்டுத் தளங்கள் போன்ற 12 துறைகளின் கீழ் முன்னெடுக்கப்படும்.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 928 மில்லியன் ரூபாவில் 424 மில்லியன் ரூபாவில் வீதிகளுக்கும், 41 மில்லியன் ரூபாவில் நீர்ப்பாசனக் குளங்கள் அணைக்கட்டுகளுக்கும், 30 மில்லியன் ரூபா விளையாட்டுத் துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், 23 மில்லியன் ரூபா ஆன்மீக உட்கட்டமைப்பு வசதிகள் மறுசீரமைப்புக்கும், 17 மில்லியன் ரூபா பாடசாலை கழிவறைவசதிகள் உள்ளடங்கலான நீர்வழங்கல் உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் வழங்கப்படுகின்றது.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 156 மில்லியன் ரூபா கிராமிய வீதிகளுக்கும், சமயவழிபாட்டுத் தலங்களுக்கும் 21 மில்லியன் ரூபாவும் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்புக்களுக்கு 14 மில்லியன் ரூபாவும் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் 187 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், 57 மில்லியன் ரூபா கிராமிய வீதிகளுக்கும், 56 மில்லியன் ரூபா சமய வழிபாட்டுத் தலங்களை மறுசீரமைப்பதற்கும், சிறுவர் பூங்காவுக்கு 4.4 மில்லியனும், குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்கு 3.4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 203 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், 45 மில்லியன் ரூபா கிராமிய வீதிகளுக்கும், 34 மில்லியன் ரூபா விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பு வசதிகளுக்கும், 17 மில்லியன் ரூபா வணக்கத்தலங்களுக்கும், 9 மில்லியன் ரூபா சிறுகுளங்கள் மற்றும் அணைக்கட்டுகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 140 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் கிராமிய வீதிகளுக்கு, 47 மில்லியன் ரூபாவும் கோவில்கள் சமயதலங்களை மறுசீரமைப்புக்கும், 22 மில்லியன் ரூபா விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

Related posts: