வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
Monday, November 27th, 2023நாட்டின் வங்குரோத்து நிலை முடிவுக்கு வந்துள்ளதால், தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு முன்மொழிவான ‘உறுமய’ தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியின் முதல் கட்டம் அனுராதபுரம், நொச்சியாகமவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் தொழில்முயற்சி கிராமமாக அபிவிருத்தி செய்வதன் மூலம் ஏற்றுமதி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக விவசாய நவீனமயமாக்கல் சேவை நிலையங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாதீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள ‘உறுமய’ என்ற காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டத்துக்காக இரண்டு பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் இலங்கையில் நிலங்களை கையகப்படுத்திய பின்னர், அந்த நிலங்களில் பயிரிடுவதற்கு பூர்வீக மக்களுக்கு உரிமம் வழங்கியிருந்தனர்.
எனினும், 1935ஆம் ஆண்டின் காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் ஊடாக உள்நாட்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கு மற்றொரு அனுமதிப் பத்திர முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
காணியை வைத்திருப்போருக்கு பயிர்ச்செய்கை மேற்கொள்ளவும் வீடுகளை கட்டவும் அதனூடாக அனுமதி வழங்கப்பட்டது.
எனினும், அந்த நிலத்தின் உரிமையை மற்றவருக்கு மாற்றவோ விற்பனை செய்யவோ அதிகாரம் வழங்கப்படவில்லை.
ஜயபூமி, சௌமிய பூமி, ஸ்வர்ணபூமி, போன்ற அனைத்து காணி உறுதிகளுக்குப் பதிலாக காணி உறுதிப்பத்திரம் வழங்க 2024ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஷங்ரிலா விருந்தகத்துக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்க முடியுமாயின், நாட்டில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வரும் மக்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குவதில் தவறேதும் இல்லை. அந்த விருந்தகத்தின் காணியினால் இலங்கைக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.
அதேபோல, நவீன விவசாயக் கைத்தொழில் மூலம் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|