வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பும் அரசாங்கம் வழங்கும் – மத்தியவங்கி ஆளுநரிடம் ஜனாதிபதி உறுதியளிப்பு!

Sunday, May 29th, 2022

மத்திய வங்கியின் செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுத்துச் செல்வதற்கான சகல ஒத்துழைப்பையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர் மற்றும் நிதிச் சபையின் உறுப்பினர் சஞ்சீவ ஜயவர்தன உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்திற்குள நிதி நெருக்கடிகளை சமாளிப்பதற்கும், நாட்டை சுமுகமான நிலைமைக்கு இட்டுச் செல்வதற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இதன் போது பாராட்டும் தெரிவித்தார்.

மேலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களுடன் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் வெற்றிகரமாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.

பணவீக்கத்தினைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை பலப்படுத்தல் என்பவற்றுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இதன் போது ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையில் அரசியல் தலையீடுகள் இன்றி இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைப்பினை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: