வங்கிக் கணக்கிலிருந்து 1.9 மில்லியன் ரூபாய் மோசடி – ஐந்து பெண்கள் கைது!

Sunday, October 22nd, 2017

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 1.9 மில்லியன் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐந்து பேரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.அரியநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டிற்கு செல்வதற்காக தென்னிலங்கை பகுதியிலுள்ள முகவர் நிறுவனம் ஒன்றின் ஊடாக நுழைவு விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

இந்நிலையில், விசா பெறுவதற்கு வங்கி கணக்கில் 2 மில்லியன் ரூபா பணம் மீகுதியாக இருக்க வேண்டும் என முகவர் நிறுவனம் கூறியுள்ளது. அதற்கமைவாக 2 மில்லியன் ரூபாய் பணத்தை குறித்த நபர் வங்கி கணக்கில் வைப்பு செய்துள்ளார்.இதனையடுத்து, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை வெளிநாட்டு தூரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறி, குறித்த முகவர் நிறுவனம் அவற்றை பெற்றுக்கொண்டுள்ளது.

எனினும், சில நாட்களின் பின்னர் குறித்த நபர் தனது வங்கிக் கணக்கினை சோதனை செய்து பார்த்த போது, வைப்பிலிடப்பட்ட பணத்திலிருந்து 1.9 மில்லின் ரூபாய் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, குறித்த முகவர் நிறுவனத்தில் பணியாற்றிய 5 பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யபட்டுவர்கள் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதன் போது மூன்று பெண்கள் சாட்சியால் அடையாளம் காணப்பட்டார்.இதனையடுத்து, குறித்த ஐந்து பெண்களையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.அரியநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: