வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, December 8th, 2022

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் திருகோணமலைக்கு கிழக்கே சுமார் 370 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று இரவு புயலாக உருவாகியுள்ளது.

இது டிசம்பர் 09 இரவு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடலைக் கடந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரையைக் கடந்து செல்லும்.

இதன் காரணமாக இன்று (08) நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும்.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம்.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

மேல் மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பசறை – பண்டாரவளை வீதியின் நமுனுகுலை பகுதியில் வீதியோரங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் அந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பசறை – பண்டாரவளை – அம்பலம் பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: