ரிஷாட் வீட்டில் பணியாற்றிய 11 பெண்களில் 3 பேர் மரணம் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவிப்பு!

Monday, August 2nd, 2021

சந்தேகத்திற்கிடமான முறையில் மரணித்த சிறுமி ஹிஷாலினியை பணிக்கு அமர்த்திய தரகர் மூலம் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட 11 பெண்களில் மூன்று பேர் இதுவரையில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

எரிக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த 16 வயதான ஹிஷாலினியும், புற்றுநோய் காரணமாக இன்னுமொரு பெண்ணும், தற்கொலை செய்துக்கொண்ட மற்றுமொரு பெண்ணுமாக 3 பேர் இதுவரையில் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும், 2019 ஆம் ஆண்டுமுதல் குறித்த தரகர் ஊடாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டப்பட்டுள்ளனர். இதுதவிர, ஏனைய 8 பெண்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

இதன்போது, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய 29 வயதான மற்றுமொரு பணிப் பெண்ணையும், ரிஷாட்டின் மைத்துனர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி இருப்பதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண், தனது வாக்குமூலத்தில் இதனைத் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த பெண் தற்போது வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேற்படி, 29 வயதான பெண் 2009 ஆம் ஆண்டுமுதல் 2010 ஆம் ஆண்டு வரையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றியதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: