ராஜீவ் காந்தி கொலை சம்பவம் – விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளனர் என தகவல்!

Wednesday, November 16th, 2022

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறைத்தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், அவர்களது சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சக தரப்புக்களை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் (ஸ்ரீஹரன்), ரொபர்ட் பயஸ், எஸ் ஜெயக்குமார் மற்றும் டி சுதேந்திரராஜா என்ற சாந்தன் ஆகிய நால்வரையும் நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் இந்த நால்வரும் தற்போது திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சில சட்ட நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

எனினும் அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான காலக்கெடு அல்லது குறிப்பிட்ட திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை

இந்த விடுதலை மற்றும் நாடு கடத்தல்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் மூலம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விடுவிக்கப்பட்ட சிலர் இலங்கையைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறப்படும் நிலையில், அதில் தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது. எனினும் இது மற்ற நாடுகளின் விசாக்கள் கிடைப்பதை பொறுத்தது என்று தமிழக அரச அதிகாரி ஒருவரைக் கோடிட்டு இந்திய செய்தித்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: