ரஸ்யாவின் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் நீக்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு தவறு – இலங்கை மருத்துவ சபை அறிவிப்பு!

Monday, September 14th, 2020

இலங்கையின் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து ரஸ்யாவின் மூன்று அரச பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறு என்று இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று சபையின் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றை ஆதாரம்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  

ஏற்கனவே கடந்த ஐந்து வருடங்களாக ஆய்வு செய்ததன் அடிப்படையில் ரஸ்யாவின் இந்த பல்கலைக்கழகங்களை இலங்கையின் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கியதாக இலங்கை மருத்துவசபை தெரிவித்திருந்தது.

இலங்கையின் கல்வி மற்றும்; தொழில்முறை என்பவற்றுக்கு அமையவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மருத்துவ சபையின் பதிவாளர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ரஸ்ய தூதரகம் இந்த முடிவு குறித்து தமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்ற அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இதற்கான உரிய விளக்கத்தை தருமாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் மருத்துவசபையை கோரியிருந்தார்.

இந்தநிலையிலேயே ரஸ்யாவின் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு தவறு என்று இலங்கை மருத்துவசபை தெரிவித்துள்ளது.

ரஸ்யாவின் பீப்பல்ஸ் ப்ரன்ட்சிப்; பல்கலைக்கழகம், பிரோகோவ் ரஸ்யன் தேசிய ஆராச்சி மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ட்ரவர் அரச மருத்துவ பல்கலைக்கழகம் என்பனவே இலங்கை மருத்துவ சபையினால் சர்வதேச பல்கலைக்கழக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: