ரஷ்ய விமான விவகாரம் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

ஏரோஃப்ளோட் விமானம் தொடர்பான பிரச்சினை இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதுவொரு தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்பதால், சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு நீதியமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஊடாக ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.
இதனிடையே
ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் பிரச்சினை இல்லை என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பினால் பயணிகளுக்கும் ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்திற்கும் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை கருத்தில் கொண்டு மீண்டும் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு குறித்த ரஷ்ய நிறுவனம் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இலங்கை வருத்தமடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஷ்ய ‘எரோஃப்ளோட்’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குத்தகை பிரச்சினை காரணமாக ரஷ்யாவின் ‘எரோஃப்ளோட்’ விமானம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு கோரி ரஷ்ய விமான நிறுவனத்தினால் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு எதிர்வரும் 8 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|