ரஷ்ய தயாரிப்பு ‘ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல்அதிகார சபை அங்கீகாரம்!

Thursday, March 11th, 2021

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக்’ என்ற கொரோனா தடுப்பூசிக்கு ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

வெகுஜன ஊடக அமைச்சின் கீழுள்ள தேசிய அபிவிருத்தி மத்திய நிலையத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020 டிசம்பர் 28ஆம் திகதி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட பணிக்குழுவொன்று உருவாக்கப்பட்டதாகவும், 2021 ஜனவரி 28 ஆம் திகதி குறுகிய காலத்திற்குள் எமது நாட்டிற்கு முதல்கட்ட தடுப்பூசிகளை பெறமுடிந்தது என்பதாகவும், மறுநாளே நாம் நாட்டில் தடுப்பூசி வழங்கும் பணியை தொடர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதற்தடவையாக எமக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசிகள் 5  இலட்சம் கிடைத்ததை சுட்டிக்காட்டிய அவர் இந்த தடுப்பூசிகளில் 1.5 மில்லியன் வருகைக்கான கோரிக்கையை முன் வைத்துள்ளதாகவும் எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் இரண்டாம் தொகுதி அதாவது ஐந்து லட்சம் தடுப்பூசி மருந்துகள் எமக்குக் கிடைக்கும் என்று லலித் வீரதுங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச ரஷ்ய நாட்டு ஜனாதிபதியிடம் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் தடுப்பூசிகளைக் கேட்டுள்ளதாகவும், அதன்படி ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு மிக விரைவில் முதற்கட்டமாக நன்கொடையாக கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: