ரஷ்யா – யுக்ரைன் விடயத்தில் இலங்கை நடுநிலை வகிக்கும் – வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவிப்பு!

Friday, February 25th, 2022

ரஷ்ய – உக்ரேன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் அறிவித்துள்ளார்.

மேலும் உக்ரேனில் மிக குறைந்த அளவான இலங்கையர்கள் உள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சிலர் வெளியேறியுள்ளனர்.

அதேநேரம், பெலாரஸில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தற்போது தீவிரமடையும் இந்த நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. இந்த நிலைமை காரணமாக இலங்கைக்கு பாதக நிலையே ஏற்படும்.

தேயிலையை விற்பனை செய்ய முடியாது என்பதுடன், எண்ணெய் பீப்பாய் மற்றும் எரிவாயு என்பனவற்றுக்கு அதிக பணம் செலுத்த வேண்டி ஏற்படும். அத்துடன், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவடையும். இதன்மூலம், மீண்டும் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதிலேயே நாடு என்ற அடிப்படையில் தாங்கள் நம்பிக்கை கொள்வதாக வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதேநேரம் எந்தத் தரப்புக்கும் ஆதரவாக கருத்து தெரிவிக்க முடியாது. யுத்தம் என்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்பதையே தற்போதை சந்தர்ப்பத்தில் தமக்கு கூறமுடியும் என வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: