ரயில் நிலையங்கள் தனியார் துறையினருடன் இணைவு!

Tuesday, June 11th, 2019

நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களைத் தனியார் துறையினருடன் இணைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், இதனால் ரயில் நிலையங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சங்கத்தின் செயலாளர் ஜனக பெர்ணான்டோ குற்றஞ் சுமத்தியுள்ளார்.

ரயில் நிலையங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகத் தெரிவித்துள்ள தனியார் பிரிவினர் அதற்குப் பதிலாக தமது விளம்பரங்களை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்துவதாகவும் பாதுகாப்புக் கட்டமைப்புகளைத் தாமே பொறுப்பேற்று நடாத்தி செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பிற்காக சிசிடிவி கெமராக்களைப் பொருத்துவதுடன் அதனை நிர்வகிக்கும் பொறுப்பினை தாமே பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளதால், அதில் பாரிய பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தொடர்ந்தும் நாட்டிலுள்ள பல ரயில் நிலையங்களை புனரமைப்பதற்காக தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

கோட்டை, மருதானை, ராகம, கம்பஹா, வெயங்கொட, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு, அநுராதபுரம், நானுஓயா மற்றும் எல்ல ஆகிய ரயில் நிலையங்கள் இந்த யோசனைத்திட்டத்தினூடாக புனரமைக்கப்படவுள்ளன.

தமது வர்த்தக விளம்பரங்களை ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இந்த யோசனைத் திட்டத்தினூடாக தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கான கட்டணமாக, ரயில் மேடை, கழிவறை கட்டமைப்பு மற்றும் பயணிகள் ஓய்வுபெறும் அறைகளை புனரமைப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்தத் திட்டத்தினூடாக ரயில்வே திணைக்களத்திற்கு ஏதேனும் இழப்பு ஏற்படுமா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: