யுத்த நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் ரஷ்ய அதிபர் புடின் பேச்சு!

Tuesday, March 15th, 2022

உக்ரைன் விவகாரம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பென்னெட்டுடன் புடின் மீண்டும் பேசியுள்ளதாக ரஷ்ய அதிபரின் கிரெம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்வது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், பல ஐரோப்பியத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாக விவாதித்து வருகிறார்.

ஏற்கனவே இஸ்ரேல் நாட்டில், புடினுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது பென்னெட் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையிலே குறித்த தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

அதன்படி புடின் மற்றும் பென்னட் இருவருக்குமிடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் 90 நிமிடங்கள் நீடித்ததாக இஸ்ரேலிய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிடையே யுத்த நிறுத்தப் பேச்சுவார்த்தை, யுத்தம் நடைபெறும் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள், தூதரக ரீதியான நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: