யுத்த களமாக காட்சியளிக்கும் கொஸ்கம : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு பணிப்பு! (படங்கள் இணைப்பு)

அவிசாவளை கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் நிர்மூலமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரித்தபோது –
முகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அத்துடன் சலாவ இராணுவ முகாமின் உட்பகுதியிலும் கொஸ்கம பிரதேசத்திலும் இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் முகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்களை வெடிப்பொருட்கள் கிடக்கும் இடத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொஸ்கம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவசர தேவைகள் இருக்குமாயின் 0112434251, 0113818609 என்ற இராணுவத்தினரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளுமாறும் வேண்டகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிப்ப சம்பவத்தால் சலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலிருந்து 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் உட்பட அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|