யுக்ரைன் – ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

Wednesday, March 2nd, 2022

ரஷ்யாவுக்கும், யுக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் நேற்றுமுன்தினம், யுக்ரைன் – பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றன.

ஆனாலும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில், முதற்கட்ட பேச்சவார்த்தை நிறைவடைந்திருந்தது. இந்த நிலையில், இன்றையதினம் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

எவ்வாறிருப்பினும், யுக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

யுக்ரைன் தலைநகர் கிவ் இல் உள்ள இலக்குகளைத் தாக்கத் தயாராகி வருவதாக, அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிவ் இல் உள்ள தொழில்நுட்ப மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் வெளியேறுமாறும், ரஷ்யா தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தலைநகரில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரம் ஒன்றின் மீது, ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஐவர் பலியானதாக யுக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், யுக்ரைனின் இரண்டாவது நகரமான கார்கிவ்வில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும் நிலையில், யுக்ரைன் நகரங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்துவதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யுக்ரைன் தலைநகர் கிவ் இற்கு அருகில் 40 மைல் நீளத்துக்கு ரஷ்யாவின் படையினர் நிலைகொண்டுள்ளதை செய்மதி படங்கள் உறுதி செய்துள்ளன.

இவ்வாறான பின்னணியில், பெண்டகன் வெளியிட்டுள்ள புதிய மதிப்பீட்டில், ரஷ்ய படைகள் கார்கிவ் மற்றும் மரியபோல் நகரங்களைக் கைப்பற்றவில்லை என்றும், அருகிலுள்ள சிறு நகரங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: