‘யாஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்!

Monday, May 24th, 2021

வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு வங்கம் அருகே நாளை மறுதினம் கரையை கடக்கும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு-மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று மேலும் வலுப்பெற்று புயலாக மாறியது. தற்போது போர்ட் பிளேரில் இருந்து 600 கிமீ தொலைவில் புயல் மையம்கொண்டுள்ளது.

இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும், பின்னர் அதிதீவிர புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா-வங்காளதேசம் இடையே 26ம் திகதி மாலையில்  கரை கடக்கலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 165 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் காரணமாக இந்தியாவின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மீட்பு குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

யாஸ் புயல் காரணமாக இன்று முதல் 29ம் தேதி வரை கிழக்கு ரெயில்வே 25 ரெயில்களை ரத்து செய்துள்ளது.

புயலால் பாதிக்கப்படும் மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்பிக்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது புயலால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளார்.

 000

Related posts: