யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Monday, July 12th, 2021

யாழ். மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவின் இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிடப்படும் என யாழ் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் யாழ். மாவட்டச் செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் –

யாழ் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் வீட்டுத் திட்டங்களுக்கான பயனாளிகள் தெரிவு தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் சகல பிரதேச செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று 12 ஆம் திகதி திங்கட்கிழமை வரை சகல பிரதேச செயலகங்களிலும் பயனாளிகள் பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.

வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை உள்ளவர்கள் எழுத்து மூலம் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முறைப்பாட்டாளர்களின் கோரிக்கைக்குப் பிரதேச செயலகத்தால் எழுத்து மூலம் காரணம் தெரிவிக்கப்பட்டு மாற்றங்கள் ஏதும் நிகழுமானால் அதனைச் சரிசெய்து 19 ஆம் திகதி இறுதிப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும்.

பயனாளிகளுக்கு எழுத்துமூலம் தெளிவுகள் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

அதன் பின்னரும் பயனாளி தனக்கு ஏதாவது ஆட்சேபனை இருப்பின் எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு விவரங்களை அனுப்பி வைத்தால் கருத்தில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: