யாழ் மாவட்டத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மேலும் 137 பேருக்குக் தொற்றுறுதி – ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, May 19th, 2021

வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 937 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 95 பேருக்கும் கிளிநொச்சியில் 31 பேருக்கும் வவுனியாவில் ஏழு பேருக்கும் முல்லைத்தீவில் நால்வருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், நெல்லியடி வெதுப்பகம் ஒன்றில் 33 பேர், நெல்லியடி வர்த்தகர்கள் மூவர், தெல்லிப்பளை அந்தோனிபுரம் கிராமத்தில் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்ட 17 பேர் உட்பட 95 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருவருக்கும் ஒட்டுச்சுட்டான் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கிளிநொச்சி கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் சிலர் வீதி சீரமைப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் என்பதுடன் ஏனையோர் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா சுகாதாரப் பிரிவில் நால்வருக்கும் மாவட்ட வைத்தியசாலையில் இருவருக்கும் தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநகரைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: