யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!
Monday, September 20th, 2021யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் நேற்று ஞாயிற்றுகிழமை வரை வெளிமாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில் –
போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் பூதவுடல்கள் உரிய சுகாதார வழிகாட்டல்களுடன் வெளிமாவட்டங்களுக்கு மின் தகனத்திற்காக அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அனுப்பப்படுகின்றன சில பூதவுடல்களுக்கு உறவினர்களால் மின் தகனம் செய்வதற்குரிய பணம் மற்றும் பூதவுடல்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பெட்டிகளை வாங்க இயலாதவர்களுக்கு அதனை கொடையாளர்களிடம் பெற்றுகொடுக்கிறோம்.
தகனம் செய்வதற்காக அனுப்பப்படும் பூதவுடல்களுடன் அவர்களின் உறவினர்கள் கூடவே செல்ல விரும்பினால் அவர்களில் சிலரை மட்டும் அழைத்துச் செல்கிறோம்.
உறவினர்கள் எல்லோரும் செல்ல முடியாத சூழ்நிலையில் இறந்த பூத உடல்களை அடக்கம் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் யாழ்.போதனா வைத்தியசாலையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இறந்தவர்களின் உறவினர்கள் எல்லோரும் அதில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அங்கு நடைபெறும் தருணத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய அஞ்சலிகளை தத்தம் வீடுகளில் செலுத்த வேண்டும்.
தமது உறவினர்களை மின் தகனம் செய்வதற்காக நிதி மற்றும் அடக்கம் செய்வதற்கான பெட்டிகள் என்பவற்றை கலாநிதி ஆறு திருமுருகனின் தலமையில் செயற்படும் சிவபூமி அறக்கட்டளை
மற்றும் தியாகி அறக்கட்டளை வாமதேவன் தியாகேந்திரன் ஆகியோர் ஊடாக பெற்றுக் கொடுக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|