யாழ் மாநகர நிதிக்குழு விவகாரம்: ஏனைய குழுக்களிலிருந்தும் வெளியேறும் நிலை உருவாகும் – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் வி.கே. ஜெகன்!

Monday, May 28th, 2018

யாழ்  மாநகர சபையின் நிதிக் குழுவில் எமது கட்சிக்கு இரண்டு உறுப்பினர்களுக்கான சந்தர்ப்பம் வழங்கப்படாதவிடத்து ஏனைய குழுக்களிலிருந்தும் நாம் வெளியேற வேண்டிய நிலை உருவாகும்  என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கா வேலும்மயிலும் குகேந்திரன் (வி.கே.ஜெகன்) சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபையின் சிறப்பு அமர்வு இன்று சபை முதல்வர் ஆனோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது மாநகர சபைக்கான நியமிக்கப்பட்ட நிலையியல் குழுக்கள் மற்றும் சபை பொறுப்பேற்கப்பட்ட காலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவீனங்கள் வேலைத்திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல் மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்தகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போதைய இந்த சபையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மக்களது நலன்களை முன்னிறுத்தி அவற்றை முடியுமானவரை எடுத்துக்கூறி அவற்றை திருத்தியமைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி  மாநகர சபையின் செயற்பாடுகள் சரியான வகையில் நடைபெறுவதற்கு நாம் வழிவகைசெய்து வருகின்றோம்.

அந்தவகையில் இந்த மாநகர சபையின் நிதிக்குழுவில் எமது கட்சிக்கு இரண்டு உறுப்பினர்  அங்கத்துத்தை தருமாறு கோரியிருந்தோம். ஆனால் எமது கட்சிக்கு ஒரு உறுப்பினருக்கே அந்த உறுப்புரிமை வழங்கப்பட்டிருந்தது. இதை நாம் கடந்த சபைக் கூட்டத்தின்போதும் சுட்டிக்காட்டி எமக்கு இரண்டு அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தோம்.

அதன் வெளிபப்பாடாக கடந்த நிதிக்குழு கூட்டத்தின்போது அந்த நிதிக்குழு நிரலில் பல குறைபாடுகள் இருப்பதை வெளிப்படுத்தியிருந்துடன் அதை திருத்தியமைக்க வேண்டும் என்றும் எமது கட்சிக்கு இரண்டு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எமது உறுப்பினர் வெளிநடப்பு செய்திருந்தார்.

எனவே தொடர்ந்தும் நாம் இந்தச் சபையின் குழுநிலை செயற்பாடுகளில் இருக்க வேண்டுமாயின் எமக்கு நிதிக்குழுவில் இரண்டு அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இதர குழுக்களிலிருந்தும் நாம் வெளியேற வேண்டிய நிலை உருவாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.