யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான விசேட செயலமர்வு!
Sunday, March 14th, 2021யாழ்ப்பாணத்தில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான செயலமர்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது.
யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை சீரமைத்து அதனை மேம்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த செயலமர்வு யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ பொறிமுறை தொடர்பாக மேற்பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது.
மாநகர முதல்வரின் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் வட்டார ரீதியாக மாநகர சபை முன்னெடுக்கும் திண்மக் கழிகவற்றலுக்கு பொறுப்பாக இருக்கின்ற அனைத்து மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பொறிமுறையில், வட்டாரத்திற்கு என்று ஒரு தனியான கழிவகற்றல் வாகனம் மற்றும் ஆளணிகளை ஒதுக்குதல். பொது மக்களுக்கு வழங்குவதற்கான கழிவகற்றல் நேர அட்டவணை தயாரித்தல்.
கழிவகற்றலின்போது மக்கள் எதிர்நோக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக உடன் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கான இலத்திரனியல் வசதி. கழிவற்றும்போது அதனைக் கண்காணிக்கின்ற மேற்பார்வையாளர் குறித்த குடியிருப்பாளரிடம் கையொப்பம் வாங்கும் நடைமுறை.
கழிவகற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு விடயங்கள் மற்றும் கழிவகற்றும் வாகனத்தின் பாதுகாப்பு. நேர அட்டவணையின் பிரகாரம் உள்ள வீதியில், குறித்த தினத்தில் கழிவகற்றல் நடைபெற்றதா என்பதனை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு பொறிமுறை.
திண்மக்கழிவகற்றல் நடைமுறைகள் மற்றும் தரம் பிரித்தல் தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தல் அது தொடர்பில் சமூக மட்ட அமைப்புக்களுடன் இணைந்து வட்டார ரீதியாக நடமாடும் சேவைகளையும் கருத்தரங்குகளையும் ஒழுங்குபடுத்தல்.
பாடசாலை மற்றும் தனியார்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு கழிவகற்றல் முகாமைத்துவம் பற்றிய கருத்தரங்குகளை ஓழுங்குபடுத்தல். திண்மக்கழிவகற்றல் பொறிமுறை சீரான பிற்பாடும் மக்கள் பொறுப்பற்ற முறையில் கழிவுபொருட்களை வீதியில் வீசுவதை தடை செய்தல்.
அதனை கண்காணிக்க மாநகர காவலர்களை நியமித்து, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடப்பவர்களிடம் இருந்து அதிகளவு தண்டப்பணம் விதித்தல் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|