யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் குப்பைகளை அகற்றப் போதிய வாகன வசதிகள் இல்லை: யாழ். மாநகர ஆணையாளர் வாகீசன்

Tuesday, March 29th, 2016

யாழ். மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் சேரும் குப்பைகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்குப் போதிய வாகன வசதிகள் இல்லை. ஆனாலும், தற்போதுள்ள வாகனங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகள் வெளியே சிந்தாமல் பாதுகாப்பான முறையிலேயே அவற்றை அகற்றி வருகிறோம் என யாழ். மாநகர ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபை எல்லைக்குள் தினம் தோறும் பெருமளவான குப்பைகளும், கழிவுகளும் சேர்கின்றன. இவற்றை உரிய வகையில் அகற்றுவதில் யாழ் . மாநகர சபை பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. நாட்டிலுள்ள ஏனைய மாநகர சபைகள் கழிவுகளை அகற்றுவதற்கு கனரக வாகனங்களைப் பயன்படுத்தி வருகின்ற நிலையில் யாழ். மாநகர சபை மட்டும் தற்போதும் உழவு இயந்திரங்களிலேயே கழிவகற்றலில் ஈடுபட்டு வருகின்றது.

உழவியந்திரங்கலில் அகற்றப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகள் வீதிகளில் சிந்துவதால் போக்குவரத்துச் செய்யும் பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாகக் கடந்த காலங்களில் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ஆனால், போதிய வாகன வசதிகள் இல்லாத நிலையிலும் நாங்கள் நேர்த்தியான முறையில் கழிவகற்றலில் ஈடுபடுகின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: