யாழ்.மாநகரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பின் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் – சபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, June 6th, 2019

யாழ். மாநகர சபையின் இவ்வாண்டுக்கான முத்திரை வரி தீர்வை நிதியை, மாநகரின் பல பாகங்களிலும் சீரின்றிக் காணப்படும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு, வெள்ள வாய்க்கால், கழிவு நீர் வடிகால் புனரமைப்பு , குளங்கள் புனரமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புக்களை சீரமைப்பதற்கு பயன்படுத்தி மாநகரின் நீர்வடிகாலமைப்பு செயற்பாடுகளை சீரமைக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ். மாநகரசபையின் மாதாந்த சபை அமர்வு இன்றையதினம் முதல்வர் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. இதன்போது இவ்வாண்டுக்கான முத்திரை வரி தீர்வை நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா குறித்த விடயம் தொடர்பில் சபையில் கருத்து தெரிவிக்கையில் –

முத்திரை வரி தீர்வை நிதியானது பொதுவான திட்டங்களுக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என சுற்றுநிருபம் கூறுகின்றது.

அந்தவகையில் குறித்த நிதியை இம்முறை எமது மாநகரின் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சீரமைப்புக்கு பயன்படுத்தி அந்தக் கட்டமைப்பை சீராக்கிக்கொள்வதுடன் மாநகரின் தூய்மையையும் இதனூடாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அந்தவகையில் முத்திரை தீர்வை மூலம் எமது சபைக்கு கிடைத்துள்ள 29 மில்லியன் ரூபா நிதியை குறித்த நீர்வடிகாலமைப்பு சீரமைப்பிற்காக பயன்படுத்தவேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.

குறித்த திட்டம் மாநகரின் அபிவிருத்தியுடன் நீர் வடிகாலமைப்பு மற்றும் வெள்ள வாய்க்கால், கழிவு நீர் வடிகால் புனரமைப்பு , குளங்கள் புனரமைப்பு உள்ளிட்ட தூய்மையாக்கலுக்கான ஒன்றாகவும் அமைந்துள்ளதால் முதல்வர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அந்த நிதி பொதுத் திட்டம் சாராத தனித்திட்டம் தொடர்பான விடயங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என கோரியதால் சபையில் சிறிது நேரம் குழப்ப நிலை காணப்பட்டது.

எனினும் குறித்த நிதியின் ஒதுக்கீட்டை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது என்பது தொடர்பில் சபையே தீர்மானிக்கும் என முதல்வர் கூறியுள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்த தூரநோக்கற்ற நடவடிக்கைகள் காரணமாக மக்கள் நலன்களையும் மாநகரின் நலன்களையும் முன்னிறுத்தியதும் அவசியமானதுமான நீர்வழங்கல் வடிகாலமைப்புக்கான சீரமைப்பு நடவடிக்கைகள் தட்டிக்கழிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: